2017-06-02 15:43:00

திருத்தந்தை, இலாத்விய அரசுத்தலைவர் Vējonis சந்திப்பு


ஜூன்,02,2017. இலாத்விய குடியரசின் அரசுத்தலைவர் Raimonds Vējonis அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஜூன் 02, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஏறக்குறைய 25 நிமிடங்கள் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய பின், திருப்பீடச் செயலர், கர்தினால், பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார், அரசுத்தலைவர் Vējonis.

திருப்பீடத்திற்கும், இலாத்வியா நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில் பல்சமய உரையாடலை வளர்க்க கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

தன் துணைவியார் உட்பட ஆறு பெண்கள், ஓர் ஆண் என, ஏழு பேர் கொண்ட குழுவுடன் திருத்தந்தையைச் சந்தித்த இலாத்விய அரசுத்தலைவர் Vejonis அவர்கள், 1585ம் ஆண்டில், புனித பீட்டர் கனிசியுஸ் எழுதிய மறைக்கல்வி ஏட்டின் நகல் ஒன்றை திருத்தந்தைக்கு அளித்தார். 

மேலும், தங்கள் நாட்டில் பல்வேறு கிறிஸ்தவ சபையினரும், மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர் என்று சொல்லி, தன் நாட்டிற்கு வருகை தருமாறு திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்தார், இலாத்விய அரசுத்தலைவர் Vejonis.

திருத்தந்தையும், Amoris Laetitia, Evangelii gaudium ஆகிய இரு திருத்தூது அறிவுரை மடல்களையும், Laudato si' திருமடலையும், ஒரு பதக்கத்தையும் அரசுத்தலைவருக்கு அளித்தார்.

இலாத்வியா, பால்டிக் கடல் பகுதியில், லித்துவேனியாவுக்கும், எஸ்டோனியாவுக்கும் இடையிலுள்ள குடியரசு நாடாகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.