2017-06-02 15:18:00

தாழ்ச்சியோடு இறைமக்களை பேணி வளர்க்க திருத்தந்தை அழைப்பு


ஜூன்,02,2017. இயேசு, தம் பதினொரு திருத்தூதர்களில் மிகவும் பாவியான பேதுருவிடமே தம் ஆடுகளை ஒப்படைத்தார் என்றும், தம் இறைமக்களை தாழ்ச்சி மற்றும், அன்புடன் பேணி வளர்க்குமாறு அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், திபேரியக் கடல் அருகே உயிர்த்த இயேசு, பேதுருவுடன் உரையாடியது பற்றிக் கூறும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை (யோவா.21,15-19) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடல், நண்பர்களுக்கிடையே இடம்பெறும் இதமான உரையாடலாக இருந்தது என்றும், பேதுரு தம்மை அன்புகூர்கிறாரா என மூன்று முறை கேட்டு, இயேசு அவரிடம் தம் ஆடுகளை ஒப்படைத்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

இயேசு தம் பதினொரு திருத்தூதர்களில் மிகவும் பாவியான பேதுருவைத் தேர்ந்தெடுத்தது நம்மை சிந்திக்க வைக்கின்றது என்றும், வெற்றியாளர் போன்று உயர்பதவியில் இருந்துகொண்டு ஆடுகளை மேய்க்க வேண்டாம், மாறாக, இயேசு செய்தது போன்று, தாழ்ச்சியுடன் அப்பணியை ஆற்ற வேண்டுமென்றும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைமக்குருவின் ஊழியர்முன் பேதுரு இயேசுவை மறுதலித்ததையும், அந்நேரத்தில் இயேசு அவரை எவ்வாறு உற்று நோக்கினார் என்பதையும் விளக்கிய திருத்தந்தை,  மறுதலிப்பதற்கு துணிச்சல் கொண்டிருந்த திருத்தூதர், அதிகமாகக் கண்ணீர் சிந்தவும் திறனைக் கொண்டிருந்தார் என்று தெரிவித்தார்.

ஆண்டவருக்குப் பணியாற்றுவதில் தம் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த பின், பேதுருவின் வாழ்வு, ஆண்டவரைப் போலவே சிலுவையில் நிறைவுற்றது என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரைப் போலவே என் வாழ்வை நிறைவு செய்கிறேன் என்று பேதுரு கூறவில்லை, மாறாக, தன்னை தலைகீழாக அறையுமாறு கேட்டுக்கொண்டார் என்றார்.

தான் ஆண்டவர் அல்ல, ஊழியர் என்றே பேதுரு தன்னை, மரணத்திற்குக் கையளித்தார், இந்த அழகான பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.