2017-06-02 15:30:00

கிறிஸ்தவகல்வி அனுபவம் பெறும் சிறாருடன் திருத்தந்தை சந்திப்பு


ஜூன்,02,2017.  கிறிஸ்தவ கல்வி அனுபவத்தைப் பெறும் பயிற்சிப் பாசறை ஒன்றில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய ஆறாயிரம் சிறாரை, இவ்வெள்ளி நண்பகலில், திருப்பீடத்தில் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Graal அல்லது The Knights எனப்படும் இப்பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ளும் மார்த்தா என்ற சிறுமி, ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும்போது, புதியவர்களைச் சந்திப்பதில் ஏற்படும் அச்சம் குறித்து கேட்ட கேள்விக்குப் பதில் கூறியத் திருத்தந்தை, வாழ்வில் பழகியவர்களுக்குப் பிரியாவிடை கொடுக்கவும், புதியவர்களைச் சந்திக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

வாழ்வில் புதிய சவால்களை ஏற்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், ஒருவர் வளர்வதற்கு விரும்பவில்லையெனில், அவர் தன்னைச் சுற்றி ஒரு சுவரை அமைக்கிறார் என்றும், அதைத் தாண்டிச் சென்றால், எல்லைகளைக் காண்பார் என்றும் திருத்தந்தை கூறினார்.

மேலும், ஜூலியா என்ற சிறுமி, எங்களைச் சுற்றியுள்ள இந்த உலகை சிறிது மாற்றுவதற்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறியத் திருத்தந்தை, சிறார் எவ்வாறு உலகை மாற்ற இயலும் என்பதை, சிறு சிறு எடுத்துக்காட்டுகள் வழியாக விளக்கினார்.

மற்றவர் சொல்வதற்குச் செவிமடுத்து, பிறரை ஏற்று, இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொண்டு, திறந்தமனம் உடையவர்களாய் வாழும்போதும், ஒவ்வொரு நாளும் மனத்தாராளத்தோடு சிறு சிறு காரியங்களை ஆற்றும்போதும், உலகை மாற்ற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.