2017-06-02 15:48:00

ஆயுத வர்த்தகத்தை ஒழிப்பதற்கு திருத்தந்தை அழைப்பு


ஜூன்,02,2017. “ஒளி, இருளை வெற்றிகொள்கின்றது என்பதை நினைவுபடுத்தும் விதமாக, நாம் ஒவ்வொருவரும், இன்றைய மோதல்களின் இருளில், சுடர்விடும் மெழுகுதிரியாக மாற முடியும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், ஆயுத வர்த்தகத்தை ஊக்குவித்து அல்லது அதற்கு அனுமதியளித்துக்கொண்டு, அமைதி பற்றி பேசுவதும், அமைதியை நிலைநாட்ட உரையாடலில் ஈடுபடுவதும், முற்றிலும் முரண்பாடானது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

உலகில் ஆயுத வர்த்தகம் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு நாடுகளின் தலைவர்கள் தங்களை உறுதியுடன் அர்ப்பணிக்குமாறு, நாம் எல்லாரும் செபிக்குமாறு, இந்த ஜூன் மாதத்தில் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இச்செபக் கருத்து பற்றிப் பேசியுள்ள காணொளியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு போரும், உண்மையிலேயே, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் போரா அல்லது, சட்டத்திற்குப் புறம்பே ஆயுதங்களை விற்பனை செய்வதற்குரிய வர்த்தகப் போரா என்று கேள்வி எழுப்பியுள்ள திருத்தந்தை, இதனால், மரண வர்த்தகர்கள், செல்வந்தராவார்கள் எனக் கூறியுள்ளார்.

இந்நிலைக்கு நாம் ஒரு முடிவு கட்டுவோம் என்றும், ஏராளமான அப்பாவி பொது மக்களைப் பலியாக்கும் ஆயுத வர்த்தகம், முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு, நாடுகளின் தலைவர்கள் தங்களை உறுதியுடன் அர்ப்பணிக்குமாறு செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.