2017-06-02 15:54:00

அருங்கொடை இயக்கம் ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி


ஜூன்,02,2017. உரோம் நகரில் தங்களின் பொன்விழாவைச் சிறப்பித்துவரும், உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு தூய ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி எனக் கூறியுள்ளார்.

தூய ஆவியாரின் ஒவ்வொரு செயலும், பன்மைத்தன்மையில் ஒன்றிப்பைக் கொணர்வதுபோன்று, தூய ஆவியார், கிறிஸ்தவ ஒன்றிப்பையும் விரும்புகிறார் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

எகிப்தில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை தவாத்ரோஸ் அவர்களுடன் சேர்ந்து செபிக்கையில் கூறியது போன்று, திருநற்கருணை கொண்டாட்டத்தில், பிற கிறிஸ்தவ சகோதரர்களுடன் ஒன்றிணைவதற்கு, அருங்கொடை இயக்கத்தினர் பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபத்திலும், பணியிலும் பிற கிறிஸ்தவ சகோதரர்களுடன் ஒன்றிணைவதற்கு, அருங்கொடை இயக்கத்தினர் சிறந்த கருவிகள் எனவும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

மே 31, இப்புதனன்று உரோம் நகரில் தொடங்கியுள்ள உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் பொன் விழா மாநாடு, ஜூன் 4, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் வருகைப் பெருவிழாவுடன் நிறைவடையும்.

இம்மாநாட்டில், ஏறக்குறைய 130 நாடுகளைச் சேர்ந்த முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.