2017-06-01 16:22:00

உக்ரைன் கர்தினால் லூபோமீர் ஹுஸார் மரணம்


ஜூன்,01,2017. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கர்தினால் லூபோமீர் ஹுஸார் (Lubomyr Husar) அவர்கள் மே 31 இப்புதனன்று மாலை இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் தலத்திருஅவைக்கு அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

1933ம் ஆண்டு, உக்ரைன் நாட்டின் Lviv எனுமிடத்தில் பிறந்த லூபோமீர் அவர்களின் குடும்பத்தினர், அந்நாட்டில் நிலவிய போர்ச் சூழலின் காரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

1958ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்ற லூபோமீர் அவர்கள், உரோம் உர்பானியா பல்கலைக் கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று, பின்னர், 1977ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

2001ம் ஆண்டு Lviv மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயராக நியமனம் பெற்ற லூபோமீர் அவர்களை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், அதே ஆண்டில், கர்தினாலாக உயர்த்தினார்.

லூபோமீர் அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை, 221ஆக குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதிபெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 116ஆக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.