2017-05-31 16:00:00

மறைக்கல்வியுரை : எதிர்நோக்குடன் வாழ தூய ஆவியாரின் உதவி


இப்புதன் காலை திருத்தந்தையின் மறைக்கல்வி உரையின் துவக்கத்தில், தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து, ‘எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியாரின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக. என் சகோதர சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்’, என்ற பகுதி வாசிக்கப்பட்டது. தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, 'தூய ஆவியானவர் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ நமக்கு அருள்புரிகிறார்' என்ற தலைப்பில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! தூய ஆவியார் திருவிழாவின்போது நம்மீது பொழியப்பட உள்ள தூய ஆவியாரின் வரங்களுக்காக நம்மையே தயாரித்துவரும் இந்நாட்களில், கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் மறைக்கல்வி உரையை இன்று, தூய ஆவியாரையும் அவரின் மீட்புப் பணிகளையும் நோக்கித் திருப்புவோம். ‘எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக’, என உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்பிடுகிறார் தூய பவுல். தூய ஆவியாரின் கொடையாக இருக்கும் 'எதிர் நோக்கு', ஒரு நங்கூரமாகவும், அதேவேளை, பாய்மரக் கப்பலாகவும் செயல்படுகிறது. நம் வாழ்வில் புயல் வீசும் நேரங்களில் நமக்கு பாதுகாப்பு வழங்குவற்கு நங்கூரமாகவும், முடிவற்ற வாழ்வெனும் பாதுகாப்பான துறைமுகத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் பாய்மரக் கப்பலாகவும், தூய ஆவியானவர் தரும் கிறிஸ்தவ எதிர்நோக்கு எனும் கொடை உள்ளது. இறைவனின் வாக்குறுதிகளுக்கும், நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கும், நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியார் சான்று பகர்கிறார்.  கர்தினால் நியூமென் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், நம்பிக்கையால் நிரப்பப்பட்டவர்களாக, நாமும், தூய ஆவியாரின் சாயலில், ஆறுதல் வழங்குபவர்களாகவும், பரிந்து பேசுபவர்களாகவும், உதவியாளர்களாகவும், அமைதியை கொணர்பவர்களாகவும் மாறமுடியும். அனைத்துப் படைப்புக்கும் எதிர்நோக்கைக் கொணரும் தூய ஆவியானவர், நாம் வாழும் இவ்வுலகிற்கான மதிப்பையும் அன்பையும் நமக்குள் தூண்டுகிறார். செபத்தில் கூடியிருந்த அன்னை மரியாவையும் அப்போஸ்தலர்களையும் போல், இந்த தூய ஆவியார் பெருவிழா, நம்மை அடையாளம் காணுவதுடன், அவர் வழங்கும் கொடை வழியாக நாம் விசுவாசத்தில் நிரப்பப்படுவோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் 50வது ஆண்டைக் கொண்டாட, இந்தியா, இந்தோனேசியா மலேசியா, சிங்கப்பூர் உட்பட, பல்வேறு நாடுகளிலிருந்து உரோம் நகருக்கு வருகை தந்துள்ள மக்களை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.