2017-05-31 14:37:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 19


மே,31,2017. திருத்தூதர் பவுல், கிறிஸ்தவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்குத் தமஸ்கு சென்றபோது, இயேசு கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். அதுவரை கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களின் கடும் எதிரியாகச் செயல்பட்ட சவுல், தமஸ்கு அனுபவத்திற்குப் பின், கிறிஸ்துவுக்காக, தன் உயிரையும் தியாகம் செய்ய உறுதி பூண்டார். மனம்மாறியவராக தமஸ்குவிலிருந்து எருசலேம் நகரத்துக்கு வந்தபோது, இயேசுவின் சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார் சவுல். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல், அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். அச்சமயத்தில் பர்னபா என்பவர், பவுலுக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். சவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும், ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசி வந்தார். அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்ட ஏரோது அரசன், புழுத்துச் செத்தான். அதேநேரம் கடவுளின் வார்த்தையும் மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் எருசலேமில் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, அங்கிருந்து அந்தியோக்கியாவிலிருந்து தங்களின் முதல் நற்செய்திப் பயணத்தைத் தொடங்கினர்.

அக்காலத்தில், அந்தியோக்கியா, எபேசு, கொரிந்து ஆகிய நகரங்கள், உரோமைப் பேரரசில், உரோம் நகரம், எகிப்தில் அலெக்சாந்திரியா ஆகிய இரு நகரங்களுக்கு அடுத்தநிலையில், செல்வத்தில் செழித்திருந்த நகரங்களாகும். இந்தப் புகழ்பெற்ற நகரங்கள், தொடக்ககாலக் கிறிஸ்தவத்தோடும் பிரிக்கமுடியாத தொடர்பைக் கொண்டிருந்தன. திருத்தூதர் பணிகள் நூலின்படி, அக்காலத்தில் வளர்ந்து வந்த புதிய நெறியைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என, அந்தியோக்கியாவிலே முதலில்  அழைக்கப்பட்டனர். இந்த அந்தியோக்கியாவிலிருந்தே பர்னபா, சவுல், யோவான் மாற்கு ஆகிய மூவரும், தங்களின் நற்செய்திப் பயணத்தைத் தொடங்கினர். தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட இவர்கள், செலூக்கியா துறைமுக நகருக்குச் சென்று, அங்கிருந்து சைப்ரஸ் தீவுக்கு கப்பலேறினார்கள். பர்னபா, சைப்ரசை சார்ந்தவர். சைப்ரசின், சாலமி நகரை அவர்கள் வந்து சேர்ந்தனர். சாலமி துறைமுகம், அக்காலத்தில் மாபெரும் வர்த்தக நகரமாக விளங்கியது. அந்நகரின் யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள். சைப்ரஸ் தீவில், கிழக்கிலிருந்து மேற்குவரை சென்று, பாப்போ நகரை அடைந்தனர். இந்நகரம், உரோமைப் பேரரசு மற்றும், Aphrodite என்ற சிலைவழிபாட்டின் மையமாக இருந்தது. பாப்போஸ் நகர மக்களின் அறநெறி வாழ்வும் சீர்குலைந்திருந்தது. சவுலும், அவருடன் சென்றவர்களும், அங்கு, உரோமை ஆளுனன் செர்ஜியுஸ் பவுலோஸ் என்பவரையும், பாரேசு எனும் பெயருடைய போலி இறைவாக்கினனான யூத மந்திரவாதி ஒருவனையும் கண்டார்கள்.

செர்ஜியுஸ் பவுலோஸ், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்பிப் பர்னபாவையும் பவுலையும் தம்மிடம் வரவழைத்தார். ஆனால், எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். அப்போது பவுல் என்னும் சவுல், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவனை உற்றுப் பார்த்து,  “அனைத்து வஞ்சகத்துக்கும் உறைவிடமானவனே, பழிபாவம் எதற்கும் அஞ்சாதவனே, அலகையின் மகனே, நீதி நேர்மை அனைத்துக்கும் பகைவனே, ஆண்டவரின் நேரிய வழியிலிருந்து திசைதிருப்புவதை நிறுத்தமாட்டாயோ! இதோ, இப்போதே ஆண்டவரது தண்டனை உன்மேல் வரப்போகிறது. குறிப்பிட்ட காலம்வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்; கதிரவனைக் காணமாட்டாய் என்றார். உடனே அவன் பார்வை மங்கியது; இருள் சூழ்ந்தது. அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான். நடந்ததைக் கண்ட ஆட்சியாளர் ஆண்டவரின் போதனையைப் பற்றி வியப்பில் ஆழ்ந்தவராய் அவர் மீது நம்பிக்கை கொண்டார். இதன்பின், சவுல், தனது உரோமையப் பெயரான பவுல் என்னும் பெயரையே பயன்படுத்தினார்.

பின்னர், பவுலும், அவரோடு இருந்தவர்களும், பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். இந்த நகரம், பம்பிலியா பகுதியின் மிக முக்கிய நகரமாகும். அங்கே யோவான் அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். பவுலும் அந்நகரில் நீண்ட நாள்கள் தங்கவில்லை.  பவுலும், பர்னபாவும், பெருகைக்கு வடக்கே நூறு மைல் தூரத்திலுள்ள, பிசிதியாவின் அந்தியோக்கியாவை அடைந்தார்கள். பவுலும் பர்னபாவும் லிஸ்திராவில் போதிக்கையில், பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு பவுல் நலம் அளித்தார். இதைக் கண்ட கூட்டத்தினர், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர். இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பவுலும் பர்னபாவும்,“மனிதர்களே, நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்றனர். பவுல் நற்செய்தியை அறிவித்தபோது, எதிர்கொண்ட துன்பங்கள் சொல்லுக்குள் அடங்காதவை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.