2017-05-27 14:32:00

இயேசுவின் வாழ்வுமுறையைப் பின்பற்றுவதே, ஆன்மீக வாழ்வுக்கு..


மே,27,2017. இச்சனிக்கிழமை காலை பத்து மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெனோவா, புனித இலாரன்ஸ் பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், குருத்துவமாணவர்கள், இருபால் துறவியர், மற்றும், மேய்ப்புப்பணியில் உதவிபுரியும் பொதுநிலையினரைச் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

திருத்தந்தை பேராலயத்தில் நுழைந்தபோது, கரவொலியுடன் கூடிய ஆரவார வரவேற்பு, அவருக்கு அளிக்கப்பட்டது. ஜெனோவா பேராயர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

முதலில் சிறிதுநேரம் செபித்தபின், அங்குக் கூடியிருந்த எல்லாரிடமும், எகிப்து நாட்டு காப்டிக் கிறிஸ்தவர்களுக்காக, என்னோடு இணைந்து, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தைச் செபியுங்கள், இந்த நம் சகோதரர்கள், தங்களின் விசுவாசத்தை மறுதலிக்காமல் இருப்பதற்காகக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறி, அச்செபத்தைச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரு பங்குத்தந்தையர், லிகூரே அருள்சகோதரிகள் அமைப்பின் தலைவர், கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர் ஒருவர் ஆகிய நால்வர் கேட்ட கேள்விகள், ஒவ்வொன்றிற்கும் பதில் அளித்தார் திருத்தந்தை.

இந்நவீன காலத்தில் ஆழமான ஆன்மீக வாழ்வை எவ்வாறு வாழ்வது எனக் கேட்ட பங்குத்தந்தையின் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றினால், நம் மேய்ப்புப்பணியை சிறப்பாக ஆற்றமுடியும், இயேசுவின் வாழ்வுமுறையைப் பின்பற்றுவதே, ஆழமான ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படையாகும் என்றார்.

இயேசு தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார், பெரும்பாலான நேரங்களில் அவர் தெருக்களில் இருந்தார், மக்கள் மத்தியில் இருந்தார், மக்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது அவர்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்றுரைத்தத் திருத்தந்தை, இயேசு, தம் தந்தையைச் சந்தித்தது, மக்களைச் சந்தித்தது ஆகிய இரு தருணங்கள் பற்றி நற்செய்தியில் வாசிக்கிறோம் எனக் கூறினார்.

அருள்பணியாளர், திருப்பலியில் கடவுளை, இயேசுவை, மக்களைச் சந்திக்கிறார் என்றும், அருள்பணியாளர் செபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புறங்கூறுதல், குழுவாழ்வைச் சிதைக்கும் எனவும் எச்சரித்தார். 

இச்சந்திப்பு முடிந்து, பாதுகாவலர் அன்னை மரி திருத்தலத்தில் இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை. பின், அத்திருத்தலப் பகுதியில், ஏழைகள், வீடற்றவர்  மற்றும் கைதிகளுடன் மதிய உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.