மே,25,2017. வளர்ச்சி என்பதில் இருண்ட பக்கங்களும், ஏற்றுக்கொள்ளமுடியாத செலவீனங்களும், மிகச்சிலரின் கைகளில் பெருமளவு வளங்களும் இருக்கும் நிலை உள்ளது என, உரோம் நகர் கமிலியன் கல்வி நிறுவனத்தில் உரையாற்றினார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகள் பங்கு கொண்டு, 'அழகிய தோட்டமாகிய இவ்வுலகை, பாலைவனமாக மாற்றிவருவது நமக்கே பெரும் கேடு' என்ற தலைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், உலகைப் பாதுகாப்பதன் வழியாக மனித மாண்பை வழங்க முடியும் என்றார்.
உலகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், ஏழைகளின் மாண்பு மதிக்கப்பட வேண்டும் என்பதும், ஒழுக்க ரீதிகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டியவை, ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, மாறாக, ஒத்திணங்கிச் செல்பவை என்றார் கர்தினால் டர்க்சன். மக்கள் வியாபாரப் பொருட்களாக கடத்திச்செல்லப்படுவது, புதிய வகை அடிமைத்தனம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் எடுத்தியம்பிய கர்தினால், உலக அளவில் பாராமுகங்கள் அதிகரித்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
உலகை வளப்படுத்துவது என்பது, மனித வாழ்வின் மேம்பாட்டிற்கே உதவுகின்றது என்பதையும் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் மதிப்பு, ஒப்புரவு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கும், உலக வளங்களின் பாதுகாப்பிற்கும் இருக்கும் தொடர்பையும் சுட்டிக்காட்டினார்.
நோய்களின்போதும், துன்பங்களிலும் எப்போதும் மனித குலத்துடன் நெருக்கமாக இருக்கும் திருஅவை, அறிவியலில் நிபுணத்துவம் கொண்டிருக்கவில்லையெனினும், மனிதாபிமானத்தில் மேலோங்கியிருக்கும் ஒன்று எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |