2017-05-24 15:04:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 18


மே,24,2017. கி.பி.முதலாம் நூற்றாண்டில் உரோமையர்களின் ஆட்சிக் காலத்தில் அனைத்து காலனி நாடுகளிலும் கல்வி வளர்ச்சி பெற்றிருந்தது. பாலஸ்தீனத்திலும், யூதர்கள் சிதறி வாழ்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் தொடக்கக் கல்விக் கூடங்கள் இருந்தன. ஆறு வயது தொடங்கியதும் குழந்தைகள் இத்தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இங்கு கிரேக்க மொழியில் பாடங்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டன. கணிதம், தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, மதம் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. யூத மாணவர்கள் உரோமையர்களின் அரசியல் வரலாற்றையும், தங்களது யூத மதம் பற்றியும் பயின்றார்கள். இவர்கள் தங்கள் முன்னோர்களின் அரசியல் வரலாறு, தாய்மொழியான எபிரேயம் இவற்றைக் கற்க வேண்டுமானால், இளைஞரான பின்னர், எருசலேம் சென்று பயில வேண்டும். இத்தொடக்கக் கல்வி, குழந்தைகளின் 12 அல்லது 13 வயதுவரை நீடித்தது. பின்னர் தர்சு, ஏதென்ஸ், அந்தியோக்கியா ஆகிய நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்கு, இவர்கள் படிக்கச் சென்றனர். புனித பவுல் தமது இருபதாம் வயதில் தனது யூதமதம் பற்றிக் கற்றுத் தெளிய எருசலேம் வந்திருக்கக்கூடும், திருச்சட்டங்களில் பழுத்த அனுபவசாலியாக இருந்த கமாலியேல் என்னும் யூத ரபியிடம் பயிற்சி பெற்றிருக்கக்கூடும் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள் (தி.ப.22:03).

அன்று யூதமக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தங்களுக்கென்று தொழுகைக்கூடம் ஒன்றையும், தங்கள் சமுதாயத்தை நிர்வகிக்க தலைமைச்சங்கம் என்ற அமைப்பையும் ஏற்படுத்திக் கொண்டனர். இவர்கள், கி.பி.முதலாம் நூற்றாண்டில் உரோமையர்களின் கலாச்சாரம், பண்பாடு, மதம் ஆகியவற்றை அனுசரித்தே வாழ வேண்டியிருந்தது. ஏனெனில் உரோமையர்கள் தங்களுக்கு எதிராக எழுகின்ற ஏனைய சமய, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர். எனவே யூதர்களின் தலைமைச்சங்கத்திற்கு இரண்டு பொறுப்புகள் இருந்தன. ஒன்று. தங்கள் யூத மதத்தின் தனித்தன்மையைக் காப்பது. இரண்டு. தங்கள் யூத மதத்தில் உள்ளவர்கள் உரோமையர்களின் கோபத்தை விலைகொடுத்து வாங்காமல் இருக்குமாறு கவனித்துக் கொள்வது. இவ்விரு பொறுப்புக்களையும் செய்வது கடினமாகக் கருதப்பட்டதால் யூத வேட்கையும், தோரா எனப்படும் ஐந்நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுமுள்ள பரிசேயர்கள் தலைமைச்சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் அம்மதத்தினர் சேர்ந்தனர். இத்தகையதொரு காலக்கட்டத்தில், கி.பி.35க்கும் 40க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கிறிஸ்தவம் துளிர்விட்டது. இது யூத மதத்திலிருந்து பிரிந்த ஓர் அமைப்பாகப் பார்க்கப்பட்டதால் இதனை முளையிலேயே கிள்ளியெறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டவர் பவுல். அவ்வாறு அவர் கிறிஸ்தவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்குத் தமஸ்கு சென்ற போது, சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் என்ற உயிர்த்த இயேசுவின் குரலைக் கேட்டார். அதன்பின் அவரது வாழ்வு அந்நொடிப்பொழுதே மாறிப் போனது.

சவுல், தமஸ்குவில், இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார். இவரின் போதனையைக் கேட்ட அனைவரும் மலைத்துப்போயினர். சந்தேகக் கண்கொண்டும் பார்த்தனர். ஆயினும், சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், “இயேசுவே கிறிஸ்து” என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார். யூதர்கள் சவுலைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். அதற்காக, அவர்கள் இரவும் பகலும் நகர வாயில்களைக் காவல் செய்தார்கள். அவர்களுடைய இச்சூழ்ச்சி சவுலுக்குத் தெரியவந்தது. ஆகவே அவருடைய சீடர்கள் இரவில் அவரைக் கூடையில் வைத்து, நகர மதில் வழியாக இறக்கி விட்டார்கள். பின் சவுல், தமஸ்குவிலிருந்து எருசலேம் நகரத்துக்கு வந்தபோது, இயேசுவின் சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல், அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். அச்சமயத்தில் பர்னபா என்பவர், சவுலுக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசி வந்தார். கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள். யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருஅவை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

திருத்தூதர் பவுலை, தர்சு நகரில் கண்ட பர்னபா, அவரைத் தன்னோடு அந்தியோக்கியாவுக்கு அழைத்துச் சென்றார். அதன்பின் பவுல், மூன்று முக்கிய   நற்செய்திப் பயணங்களை மேற்கொண்டார். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மைல்கள் பயணம் செய்தார் பவுல் என விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.