2017-05-23 16:05:00

மனந்திறந்த உரையாடலில் ஈடுபட இத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை


மே,23,2017. தூய ஆவியாரால் அசைக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்படவும், ஆறுதலளிக்கப்படவும், நம்மை அவரிடம் கையளிப்போம் என, இத்தாலிய ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று, தங்களின் எழுபதாவது பொதுப் பேரவையை தொடங்கிய இத்தாலிய ஆயர்களை, அன்று மாலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, உரோம் ஆயரான, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் வழங்கும் சக்தியின்றி, மனிதர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வீணானதாக ஆகிவிடும் எனக் கூறினார்.

உற்றுக்கேட்டல், படைப்பாற்றல்திறன், மனந்திறந்த பகிர்வு, முரண்பட்ட கருத்துக்களைத் தாழ்ச்சியுடன் எதிர்கொள்ளல் போன்றவற்றுக்கு, இக்கூட்டம் உதவும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர் சொல்லும் கருத்து ஏற்க முடியாததாக இருக்கும்போதுகூட, உண்மையான உரையாடல் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பேரவையில், ஒவ்வொருவரும் சுதந்திரமாக, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவது முக்கியம் என்றும் தெரிவித்தார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக, பத்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய, கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை, தன்னோடு சேர்ந்து பணியாற்றுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் கூறினார்.

இவ்வியாழனன்று நிறைவடையும் இக்கூட்டத்தில், இத்தாலிய ஆயர்கள் மூன்று ஆயர்களின் பெயர்களை, திருத்தந்தைக்குச் சமர்ப்பிப்பார்கள். இம்மூவரில் ஒருவரை, இப்பேரவையின் புதிய தலைவராகத் திருத்தந்தை நியமனம் செய்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.