2017-05-22 16:46:00

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சீனாவுக்காக திருத்தந்தை செபம்


மே,22,2017. இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள மாபெரும் அன்புக் கட்டளை பற்றி விளக்கினார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான, தூய ஆவியாராம் துணையாளரை அனுப்புவதாக இயேசு அளித்த வாக்குறுதியை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை, நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன் என்ற இயேசுவின் வாக்குறுதி, கிறிஸ்துவின் புதிய வருகையின் மகிழ்வை வெளிப்படுத்துகின்றது என்றார்.

தூய ஆவியார் வழியாக, இயேசுவில் இறைமக்களாக நாம் ஒன்றிணைந்துள்ளோம், இந்த இணைப்பில், திருஅவை தனது அயராத மறைப்பணிக்கு, வற்றாத ஊற்றைக் கண்டுகொள்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இன்னும், அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், இடம்பெற்ற வன்முறையில் பலியானவர்களுக்காகச் சிறப்பாகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, ஆயுதங்களை அல்ல, மாறாக, உரையாடலைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, 2015ம் ஆண்டு நவம்பரில் இந்நாட்டுக்குத் தான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட பின், இந்நாடு தனது இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது என்றும் கூறினார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், அண்மையில் இடம்பெற்ற ஆயுத மோதலில், 17 குடிமக்கள் உட்பட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் கட்டாயமாகப் புலம் பெயர்ந்துள்ளனர்.

இன்னும், சீனாவின் Shanghaiலுள்ள Sheshan திருத்தலத்தில் வணங்கப்பட்டுவரும், சகாய அன்னையின் விழாவான மே  24, வருகிற புதனன்று, சீனாவிலுள்ள கத்தோலிக்கருடன் ஆன்மீக முறையில் ஒன்றிணைவோம் என்றும், திருத்தந்தை திருப்பயணிகளிடம் கூறினார்.

சீனாவிலுள்ள திருஅவைக்காகச் செபிக்கும் உலக நாள், பத்து ஆண்டுகளுக்கு முன், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது எனவும், திருத்தந்தை குறிப்பிட்டார்.

Sheshan அன்னை மரியின் விழா நாளான மே 24ம் தேதியை, இந்த செப நாளாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.