2017-05-20 16:32:00

இலங்கையில் கட்டாயமாகக் காணாமல்போதல் குறித்த சட்டம்


மே,20,2017. வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல், குற்றச் செயலாகும் என்பதை வரையறுக்கும் சட்டம் ஒன்று விரைவாக கொண்டுவரப்பட வேண்டுமென்று, இலங்கை ஊடகவியலாளரும், மனித உரிமை ஆர்வலர்களும் அந்நாட்டின் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல் அதிகமாக இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என, வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல் குறித்த ஐ.நா. குழு கணித்துள்ளவேளை, ஊடகவிலயாளர், சட்ட அமைப்பாளர்கள், குடியுரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மே 16, இச்செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில், இவ்வாறு, இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டனர்.

வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தை, இலங்கை அரசு 2016ம் ஆண்டில் அமல்படுத்தி, மசோதா ஒன்றையும் பரிந்துரைத்தது, ஆனாலும், இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்று, மனித உரிமைகள் குழுவின் தலைவரான தீபிகா உடுகாமா அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையில், 1983ம் ஆண்டுக்கும், 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சண்டையில், காவல்துறை, இராணுவம் மற்றும், உப இராணுவத்தினரால், ஏராளமானோர் காணாமல்போயுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.     

இலங்கை அரசு பரிந்துரைத்துள்ள மசோதாவில், காணாமல்போதல் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, இருபது ஆண்டுகள்வரைச் சிறைத் தண்டனையும், பத்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.