2017-05-19 15:36:00

வறிய மாணவருக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை


மே,19,2017. தலித் சிறார் மற்றும், பொருளாதாரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறார், கல்வி பெறுவதற்கு கொண்டிருக்கும் அடிப்படை உரிமைக்கு உறுதி வழங்கும் விதமாக, அவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டவர் பணிக்குழுவின் தலைவரான, செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் அந்தோனிசாமி அவர்கள், தன் மறைமாவட்டத்திலுள்ள அனைத்துக் கத்தோலிக்கப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்து, இச்சிறாருக்கு, கல்விக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தலித் சிறார் மற்றும், பொருளாதாரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறாருக்கு, தமிழ்வழி பள்ளிகளில் ஐம்பது விழுக்காடும், ஆங்கிலவழிப் பள்ளிகளில் 25 விழுக்காடும், கட்டணச் சலுகைகள் தரப்படவேண்டுமென, ஆயரின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தச் சலுகை அளிக்கப்படுவதற்கு, பங்குக்குருவின் பரிந்துரைகள் அவசியமில்லை எனவும் கூறும் ஆயரின் அறிக்கை, தன் மறைமாவட்டத்திலுள்ள எல்லா கத்தோலிக்கப் பள்ளிகளும் இதனை நடைமுறைப்படுத்தி, மற்ற மறைமாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

ஆயர் நீதிநாதன் அவர்களின் இந்த அறிக்கை பற்றி, ஆசியச் செய்தியிடம் கூறிய, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டவர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி, தேவசகாயராஜ் அவர்கள், இந்தக் கோரிக்கையை, இந்தியாவிலுள்ள ஏனைய மறைமாவட்டங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.