2017-05-17 15:46:00

செபத்தின் வல்லமையைச் சொன்ன பாத்திமா பயணம்


மே,17,2017. புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு, மரியன்னை, மற்றும் புனிதர்களின் திருத்தலங்கள் எவ்விதம் பயனுள்ளவையாக இருக்கும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்தில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் ஓர் எடுத்துக்காட்டு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தை மேற்கொண்ட பாத்திமா திருத்தலப் பயணத்தின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தை மேற்கொண்ட பாத்திமா திருத்தலப் பயணம், அமைதி என்ற செய்தியை சிறப்பாக எடுத்துரைக்கிறது என்றும், செபத்தின் வல்லமை, குறிப்பாக, செபமாலை என்ற பக்தி முயற்சியின் வல்லமை, இத்திருப்பயணத்தின் வழியே வெளிப்பட்டது என்றும், பேராயர், பிசிக்கெல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, திருத்தலத்தை நோக்கி மக்கள் செல்வது நமக்குப் பழக்கமான ஒரு மரபு என்றாலும், சமுதாயத்தின் விளிம்புகளைத் தேடி நாம் செல்லவேண்டும் என்பதையும், தன் திருத்தூதுப் பயணத்தின் முக்கியச் செய்தியாக திருத்தந்தை கூறினார் என்று பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

திருத்தலங்களில் மக்களிடையே பரவலாகக் காணப்படும் பக்தி முயற்சிகள், நற்செய்தியைப் பறைசாற்றும் புதிய வழிகள் என்பதை, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவைக்கு திருத்தந்தை வழங்கிய மடலில் கூறியுள்ளதையும், பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.