2017-05-16 16:08:00

பூர்வீக இன மக்களின் பிரச்சனையில் குடியரசுத்தலைவர் தலையிட..


மே,16,2017. இந்தியாவில் வாழ்கின்ற கோடிக்கணக்கான பூர்வீக இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு, குடியரசுத்தலைவரின் தலையீடு அவசியம் என, பூர்வீக இன மக்கள் பகுதியில் மறைப்பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

டெல்லியிலுள்ள இந்திய ஆயர் பேரவை இல்லத்தில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியபின், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் மனு சமர்ப்பித்துள்ள ஆறு ஆயர்கள், மாநில அரசுகளின் கொள்கைகள், பூர்வீக இன மக்களின் உரிமைகளை நசுக்குகின்றன என்று, கவலை தெரிவித்துள்ளனர்.

பூர்வீக இன மக்களின் நிலம், காடு, மற்றும், சமூக-கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு, குடியரசுத்தலைவரின் தலையீட்டை விரும்புகின்றோம் எனக் கூறியுள்ள ஆயர்கள், பூர்வீக இன மக்களுக்கு நிலமே வாழ்வாதாரம் என்றும், இம்மக்களில் 90 விழுக்காட்டினர், வேளாண்மையைச் சார்ந்தே வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வாழும் 120 கோடிப் பேரில், ஒன்பது விழுக்காட்டினர், அதாவது ஏறக்குறைய பத்து கோடியே நாற்பது இலட்சம் பேர் பூர்வீக இனத்தவர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.