2017-05-13 16:43:00

பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ வாழ்க்கை குறிப்புகள்


மே,13,2017. பாத்திமா பங்கைச் சேர்ந்த Aljustrel என்ற ஊரில் பிறந்த பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய இருவரும் உடன் பிறந்தோர். இவர்கள்,  மனுவேல் பேத்ரோ மார்த்தோ, ஒலிம்ப்பியா தெ ஜேசுஸ் தம்பதியருக்குப் பிறந்த எழுவரில் இளையவர்கள். 1908ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்த பிரான்செஸ்கோ, ஜூன் 20ம் தேதியும், 1910ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பிறந்த ஜசிந்தா, மார்ச் 19ம் தேதியும் பாத்திமா பங்கு ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றனர். பக்தியுள்ள கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்த இவர்கள், விசுவாசத்திலும், பிறரன்பிலும் வளர்க்கப்பட்டனர். இவர்கள் தங்களின் குடும்ப ஆடுகளை மேய்க்கத் தொடங்கியபோது பிரான்செஸ்கோவுக்கு எட்டு வயது. ஜசிந்தாவுக்கு ஆறு வயது. 1916ம் ஆண்டில், வசந்த காலம், கோடை காலம் மற்றும் இலையுதிர் காலங்களில், அமைதியின் வானதூதரைப் பார்த்துள்ளனர். பின்னர், 1917ம் ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையில், ஆகஸ்ட் தவிர (ஆகஸ்ட் 19), ஒவ்வொரு மாதத்தின் 13ம் தேதியன்று செபமாலை  அன்னை மரியாவைக் காட்சியில் கண்டுள்ளனர். இம்மூன்று சிறாரில் மிகவும் பக்தியுள்ளவர் பிரான்சிஸ்கோ. இவர், கடவுள் தன்னோடு இருக்கிறார் என்று    எப்போதும் சொல்லிக்கொண்டு பிறரையும் செபம் சொல்ல அழைப்பார். 1918ம் ஆண்டு அக்டோபரில் கடும் காய்ச்சலால் தாக்கப்பட்டு, 1919ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி காலமானார். 1918ம் ஆண்டு இறுதியில், ஜசிந்தாவும் அதே காய்ச்சலால் தாக்கப்பட்டு, 1920ம் ஆண்டு பிப்ரவரி இருபதாம் தேதி லிஸ்பன் மருத்துவமனையில் இறந்தார். இவ்விருவரும், புனித திருத்தந்தை 2ம்ஜான் பால் அவர்களால், இரண்டாயிரமாம் ஆண்டு, மே 13ம் தேதி, பாத்திமாவில், அருளாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.