2017-05-12 16:19:00

திருத்தந்தையின் பாத்திமா பயணம் குறித்து கர்தினால் பரோலின்


மே,12,2017. மரியன்னையை, எளிய மக்கள் எவ்விதம் உணர்ந்தனர் என்பதை மீண்டும் நமக்கு நினைவுறுத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

மே 12, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா திருத்தலத்திற்கு மேற்கொள்ளும் 19வது திருத்தூதுப் பயணத்தைக் குறித்து,  வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்திற்கு முன்னும், பின்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேரி மேஜர் பசிலிக்காவுக்குச் சென்று, உரோமை மக்களின் பாதுகாவலரான மரியன்னைக்கு முன் செபிப்பதிலிருந்து, அவர் அன்னையின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றினை அறிய முடிகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் இப்பேட்டியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

சக்தியும், செல்வமும் மிக்கவர்கள் முதல் உலகப் போரை உருவாக்கி வந்த வேளையில், மரியன்னை, சக்தியற்ற, படிப்பறிவற்ற எளிய இடையர்களாகிய சிறாருக்குத் தோன்றியது, அன்னை மரியா, விளிம்புகளில் வாழ்வோரைத் தெரிவு செய்கிறார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

"அர்த்தமற்ற படுகொலை" என்று, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் விவரித்த முதல் உலகப்போரில், பழிக்குப் பழி என்ற பாணியில், சக்தி மிக்கவர்கள் சிந்தித்த வேளையில், மன்னிப்புச் செய்தியை இவ்வுலகிற்கு வழங்க, பாத்திமா அன்னை, எளியச் சிறாரைத் தேர்ந்தெடுத்தார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

திருத்தந்தை மேற்கொள்ளும் இப்பயணத்தில் வயதில் மிகக் குறைந்த குழந்தைகளான பிரான்சிஸ்கோ, ஜசிந்தா, இருவரையும் புனிதர்களாக உயர்த்துவதன் வழியே, யாரும், எவ்வயதிலும், நற்செய்தியின் விழுமியங்களின்படி வாழ முடியும் என்பதை இவ்வுலகிற்கு திருத்தந்தை உணர்த்த விரும்புகிறார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள், இப்பேட்டியின் முடிவில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.