2017-05-11 16:25:00

"மரியன்னையுடன், நம்பிக்கையின், அமைதியின் திருப்பயணியாக"...


மே,11,2017. "’மரியன்னையுடன், நம்பிக்கையின், அமைதியின் திருப்பயணியாக’ நான் நாளை பாத்திமாவுக்குச் செல்கிறேன். அனைத்தும் இறைவனின் கொடை என்பதையும், அவரே நம் வலிமை என்பதையும், அன்னையின் வழியே, நாம் காண்போமாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

மே 12, 13 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை, பாத்திமா திருத்தலத்திற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்கு ஒரு முன்னோடியாக, இந்த டுவிட்டர் செய்தி, @pontifex என்ற முகவரியில், ஒன்பது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

1917ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில், மூன்று இடையர்களுக்கு, மரியன்னை தோன்றிய அற்புத நிகழ்வின் முதல் நூற்றாண்டைக் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமாவுக்கு திருப்பயணியாகச் செல்கிறார்.

மேலும், இத்திருத்தூதுப் பயணத்தின்போது, பாத்திமா திருத்தலத்தில் கூடியிருக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், பாத்திமா அன்னையின் காட்சியைக் கண்ட மூன்று இடையர்களில், அருளாளர்களான பிரான்சிஸ்க்கோ மார்த்தோ, ஜெசிந்தா மார்த்தோ ஆகிய இருவரையும் புனிதர்களாக உயர்த்துகிறார் திருத்தந்தை.

மே 12, இவ்வெள்ளி பிற்பகல், உரோம் நேரம் 2 மணிக்கு பியூமிச்சினோ விமானதளத்திலிருந்து போர்த்துக்கல் நாட்டிற்கு தன் திருத்தூதுப் பயணத்தைக் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 13, சனிக்கிழமை தன் பயணத்தை நிறைவு செய்து, மாலை 7 மணியளவில் உரோம் நகரை அடைவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.