2017-05-11 16:33:00

இறைமக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும் பயணம் - திருத்தந்தை


மே,11,2017. இறைவனின் மக்கள், தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தும் பயணத்தில் எப்போதும் ஈடுபட்டுள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

திருத்தூதுப் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல், மீட்பின் வரலாற்றை விளக்கிக் கூறும் பகுதியை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.

இறைமக்களின் இன்பம், துன்பம், சுதந்திர நிலை, அடிமைத்தனம் என்ற அனைத்திலும், இறைவன் அவர்களோடு பயணம் செய்தார் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இவை அனைத்தின் வழியாகவும் மக்கள் முழுமை பெறுவதையே இறைவன் விரும்பினார் என்பதை எடுத்துரைத்தார்.

இறை மக்கள், எப்போதும், தங்கள் நம்பிக்கை மற்றும் நன்னெறியில் ஆழம் காணும் வழிகளில் பயணம் செய்துள்ளனர் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மத நம்பிக்கை, மற்றும் நன்னெறி குறித்து இன்று நிகழும் மோதல்களைக் குறித்து, தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், 'அத் லிமினா' சந்திப்பிற்கென வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள கனடா Québec பகுதி ஆயர்கள் 29 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.