2017-05-10 16:46:00

புனிதர்கள் பேதுரு, பவுல் மரணத்தின் நினைவாக நாணயம்


மே,10,2017. "ஒன்றுமில்லா நிலையைவிட, கடவுள் எவ்வளவோ பெரியவர், அதிக இருள் சூழ்ந்த இரவுகளையும், ஏற்றிவைக்கப்படும் ஒரு மெழுகுதிரி வெற்றிகொள்ளும்" என்ற சொற்கள் அடங்கிய செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், புனிதர்களான பேதுருவும், பவுலும் மறைசாட்சிகளாக உயிர் துறந்ததன் 1950ம் ஆண்டு நிறைவையொட்டி, நினைவு நாணயம் ஒன்று, வருகிற ஜூன் முதல் தேதியன்று வெளியிடப்படும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

கி.பி. 67ம் ஆண்டு, உரோம் நகரில், புனிதர்களான பேதுருவும், பவுலும் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்ற மரபையொட்டி, வெளியிடப்படும் இந்த நாணயம், 2 யூரோ மதிப்புடையது என்றும், இதனை, Gabriella Titotto என்ற இத்தாலியர் வடிவமைத்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இரு புனிதர்களின் உருவங்களுடன், புனித பேதுருவின் அடையாளமாக, விண்ணகத்தின் திறவுகோல், மற்றும் புனித பவுலின் அடையாளமாக, வாள் ஆகியவை, இந்நாணயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.