2017-05-10 16:56:00

தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜே-இன், கத்தோலிக்கர்


மே,10,2017. மே 10, இப்புதனன்று, தென் கொரிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள், அந்நாட்டின் இரண்டாவது கத்தோலிக்க அரசுத் தலைவர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அரசுத்தலைவர், Park Gyuen-hye அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில், மூன் ஜே-இன் அவர்கள், பெருமளவு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு குடியேறிவந்த பெற்றோர்களுக்குப் பிறந்த மூன் ஜே-இன் அவர்கள், வட கொரியாவுடன் மோதல்களை மேற்கொள்ளாமல், பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு முடிய தென் கொரிய அரசுத் தலைவராகப் பணியாற்றிய கிம் டே ஜுங் (Kim Dae jung) அவர்களுக்குப் பின், 64 வயது நிறைந்த மூன் ஜே-இன் அவர்கள், இரண்டாவது கத்தோலிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.