2017-05-10 15:53:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 16


மே,10,2017. கோவில் என்றாலே திருவிழா, திருவிழா என்றாலே கோவில்தான். விழை என்றால் விருப்பம் என்று அர்த்தம். எனவே, விழாக்கள் மகிழ்வை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் விரும்பி நடத்தப்படுபவையாகும். கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுதுபோக்கும், நல்லுறவுமே விழாக்களின் நோக்கமாகும். இவ்விழாக்களில் சில, மிக ஆடரம்பமாகவும், சில எளிமையாகவும் சிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் விழாக்களில் சிலவற்றை யாருமே மறப்பதில்லை. அவ்வாறு கிறிஸ்தவத்தில் சிறப்பிக்கப்படும் விழாக்களில் ஒன்றுதான், திருத்தூதர் புனித பவுலின் மனமாற்ற விழா. சனவரி 25ம் நாள் இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. உரோம் நகரில், திருத்தூதர் புனித பவுலின் கல்லறை மீது கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான பசிலிக்காவில், அன்றைய நாளில், திருத்தந்தையர் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாடு நிறைவேற்றுகின்றனர். அவ்வழிபாட்டில், கத்தோலிக்கர் மட்டுமின்றி, பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அல்லது அத்தலைவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த மனமாற்றமே, புனித பவுலின் வாழ்வுக்குத் திருப்புமுனையாக அமைந்திருந்தது. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பரப்பிய மாபெரும் மறைப்பணியாளர்களில் இவரும் ஒருவர். எந்த ஒரு கடின இதயத்தவரும் அல்லது, கடவுள் நம்பிக்கையற்றவரும், நம் மீட்பராம் இயேசுவால் புத்தம் புதிய மனிதராக மாற இயலும் என்பதற்கு புனித பவுலின் மனமாற்றம் ஒரு சான்று.  

புறவினத்தாரின் திருத்தூதர் என்றழைக்கப்படும் புனித பவுல், தற்போதைய துருக்கி நாட்டிலுள்ள தர்சு நகரில் செல்வ செழிப்புமிக்க யூதக் குடும்பத்தில், கி.பி.பத்தாம் ஆண்டளவில் பிறந்தவர். இந்நகரம் அக்காலத்தில் உரோமைப் பேரரசின் கீழ் இருந்தது. எனவே புனித பவுல் உரோமைக் குடிமகன். அக்காலத்தில் பல ஆண்கள் இருபெயர்களைக் கொண்டிருந்ததுபோன்று, இவரும் இரு பெயர்களைக் கொண்டிருந்தார். யூத மரபுப்படி இவர் விருத்தசேதனம் பெற்றபோது, சவுல் என்ற எபிரேயப் பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. இப்பெயர் தவிர, பவுல் என்ற உரோமைப் பெயரையும் இவர் கொண்டிருந்தார். இவர் இளவயதிலேயே எருசலேமுக்கு வந்து, அக்காலத்தில் புகழ்பெற்ற கமாலியேல் என்னும் யூத ராபியிடம் யூதச் சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தார். சவுல், மிகத் திறமையான மாணவராக இருந்தார். இவரின் அறிவுக்கூர்மை, யூத மதத்திலும், யூத மரபிலும் இவர் கொண்டிருந்த தீவிரப் பற்று ஆகியவற்றால், பரிசேயர் என்ற முறையில், இவர் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். யூத மாணவர்கள் தங்கள் படிப்போடு ஏதாவது ஒரு தொழில் கற்க வேண்டுமென்று இருந்ததால், சவுலும், கூடாரம் செய்யும் தொழிலைக் கற்றார். இத்தொழிலே, பிற்காலத்தில், இவரின் நற்செய்திப் பயண வாழ்வுக்குப் பெரிதும் உதவியது. சவுல், யூத மதச் சட்டத்திலும், மரபிலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்ததால், அவர் சார்ந்த யூதமத சகோதரர்கள், அக்காலத்தில் புதிதாகப் பரவிவந்த, புதியநெறியைப் பின்பற்றுவது கண்டு மனம் வருந்தினார். இப்புதியநெறியே கிறிஸ்தவம் என அழைக்கப்பட்டது. தான் கடவுளுக்குத் தொண்டுபுரிவதாக நினைத்துக்கொண்டிருந்த சவுல், கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய எதிரியானார். அதனால், வீடு வீடாய்ச் சென்று, கிறிஸ்தவர்களைத் தேடி அவர்களை இழுத்துவந்து சிறையில் அடைத்தார். ஏன் கொலைகளும் அரங்கேறின. புனித ஸ்தேவான் கல்லால் எறியப்பட்டு மறைசாட்சியாகக் கொல்லப்பட இவரே கட்டளையிட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சவுல் தலைவராக இருந்ததால், அந்நேரத்தில், கல்லெறிந்தவர்களின் மேலுடைகளை, இவர் பாதுகாத்துக்கொண்டிருந்தார். புனித ஸ்தேவான், தான் கல்லால் எறியப்படுகையில், ஆண்டவரே இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என செபித்தது, புனித பவுலின் மனமாற்றப் பாதையில் விதையைத் தெளித்திருக்கலாம் என நம்பலாம். 

சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?”என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்”என்றார். அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடருக்கு ஆண்டவர் தோன்றி, சவுலிடம் அனுப்பினார். அனனியா, சவுல் மீது கை வைத்து, சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார் என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் சவுல் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். இதற்குப் பின் நடந்தது என்ன?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.