2017-05-09 15:00:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 19


ஒரு கற்பனைக் காட்சியுடன் நம் தேடலை இன்று துவக்குவோம்...

கார் ஒன்று, சாலையில் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கணவர் காரை ஓட்ட, மனைவி அருகில் அமர்ந்துள்ளார். எதிர்பாராத வேளையில் விபத்து நிகழ்கிறது. மனைவி, ஒரு சில காயங்களுடன் தப்பித்துக் கொள்கிறார். கணவரோ, மிகுதியாக அடிபட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். காரைவிட்டு வெளியேறிய மனைவி, சாய்ந்து கிடந்த காரை, தன் முழு வலிமையைக் கொண்டு இழுத்து, நிமிர்த்தி, உள்ளே மாட்டிக்கொண்டிருந்த தன் கணவரை வெளியேக் கொணர்ந்து, அவசர உதவியை அழைத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறார். ஒரு மணி நேரம், அவசர சிகிச்சை அறைக்கு முன் தவமிருக்கிறார், மனைவி. ஒரு மணி நேரம் சென்று, மருத்துவர் வெளியே வந்து, கணவர் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டார் என்ற செய்தியைச் சொல்கிறார். அதுவரை தனக்குள் தேக்கி வைத்திருந்த வலிமை, வீரம் அனைத்தையும் அந்நொடியில் இழந்து, மனைவி, மயக்கமுற்று விழுகிறார்.

இது, ஒரு கற்பனை காட்சியென்றாலும், இதையொத்த நிகழ்வுகள் உலகில் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்பதை நாம் மறுக்க இயலாது. எதிர்பாராத வேளையில் ஒரு துயர நிகழ்வு நம்மைத் தாக்கும்போது, அந்த நொடியில் அதை எதிர்கொள்ள நமக்குள் உருவாகும் வலிமை, வீரம் மிக அதிகமாக இருக்கும். சிறிது நேரம் சென்று, அல்லது, சில நாட்கள் கழிந்து, அத்துயர நிகழ்வின் விளைவுகளை நாம் சந்திக்கும் வேளையில், நமது வலிமையும், வீரமும் விடைபெற்றுப் போய்விட, வேதனையும், மனத்தளர்வும் நம்மை ஆக்ரமித்து விடுகின்றன.

இதையொத்த ஓர் அனுபவம், ஆன்மீக நிலையிலும் நமக்கு உருவாவதை உணர முடியும். நமது நெருங்கிய உறவினர் ஒருவரை திடீரென இழக்கும்போது, அது இறைவனின் திருவுளம் என்று சொல்லி, அந்நேரம் அமைதியடையக்கூடும். ஆனால், அத்துயர நிகழ்வைத் தொடர்ந்துவரும் நாள்களில், நமது உறவினர் தங்கியிருந்த அறை, படுத்திருந்த கட்டில், அமர்ந்திருந்த நாற்காலி, பயன்படுத்திய உடைகள் ஆகியவற்றை, மீண்டும், மீண்டும் காணும்போது நமக்குள் உருவாகும் வேதனை, இறைவனின் திருவுளத்தை காண முடியாமல் நம்மைத் தவிக்கவிடுகிறது. மனநலம் பற்றி அறிந்தவர்கள், இத்தகைய நிலையை, 'காலம்தாழ்த்திய பதிலிறுப்பு' (Delayed Response) என்றழைப்பதுண்டு.

நாம் தேடல் பயணத்தை மேற்கொண்டுள்ள யோபின் வாழ்வில், இத்தகையதோர் அனுபவம் அவருக்கு உண்டானது. ஒரே நாளில் அவர், தன் உடைமைகள், அனைத்தையும், புதல்வர், புதல்வியரையும் இழந்தபோது, "ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். அவரது பெயர் போற்றப்பெறுக" (யோபு 1:21) என்று அமைதியாகக் கூறினார். இன்னும் சில நாள்களில், அவர் தன் உடல் நலனை இழந்தபோதும், "நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம், ஏன் தீமையைப் பெறக்கூடாது?" (யோபு 2:10) என்று தெளிவாகக் கூறினார்.

இந்த அமைதியான, தெளிவான மனநிலை அதிக நாள்கள் நீடிக்கவில்லை. அவர், 'காலம்தாழ்த்திய வேதனையில்' சிக்கித் தவித்தார். தன்னை ஏன் இறைவன் இந்நிலைக்கு உள்ளாக்கினார் என்ற கேள்வி, அவரை இடைவிடாமல் சித்திரவதை செய்தது. இந்தக் கேள்விக்கு யோபின் நண்பர்கள் மூவர், அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு பதிலை, வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவந்தனர். யோபு, இறைவனுக்கு எதிராக குற்றம் புரிந்திருக்கவேண்டும்; எனவே, அவர் இவ்விதம் துன்புறுகிறார் என்பது ஒன்றே, அவர்கள் கூறிய ஒரே கருத்து.

கடவுள், நன்னெறி, பாவம், தண்டனை என்ற உண்மைகளைப் பற்றி யோபின் நண்பர்கள் கொண்டிருந்த கருத்துக்கள், காலத்தால் அழிக்கமுடியாதபடி, கல்லில் செதுக்கப்பட்ட கருத்துக்களாய் இருந்தன. மனிதர்கள் துன்பப்படுவதற்கு ஒரே காரணம், அவர்கள் செய்த பாவத்திற்கு இறைவன் தரும் தண்டனை. இதற்கு எவ்வித விதிவிலக்கும் இருக்கமுடியாது என்பது, அவர்கள் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஒரு கற்பனைக் காட்சியில், யோபின் நண்பர்களான, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் மூவரையும் கல்வாரிக்கு அழைத்துச் செல்வோம். அங்கு, சிலுவையில் இயேசு சித்ரவதைகளை அனுபவிக்கும் அந்நேரத்தில், இம்மூன்று நண்பர்களும் அங்கிருக்க நேர்ந்தால், அவர்கள், இயேசுவையும் ஒரு பாவியென்று, குற்றவாளியென்று முத்திரை குத்தியிருப்பர். இயேசு தன் வாழ்வில் ஏதோ ஒரு குற்றம் செய்ததால்தான், அவர் இவ்வளவு துன்பங்களுக்கு உள்ளானார் என்று இவர்கள் மூவரும் தீர்ப்பு வழங்கியிருப்பர்.

மாற்றமுடியாத அவர்கள் கருத்தை, யோபு ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அவர்கள் அவரைத் தாக்கத் துவங்கினர். யோபின் நண்பர்கள் அவரை ஏன் இவ்வளவு கடுமையாகத் தாக்கிப் பேசினர் என்ற கேள்விக்கு, விவிலியப் பேராசிரியரான வில்லியம் பிரவுன் (William Brown) என்பவர், தான் எழுதிய 'Character in Crisis' என்ற நூலில் அளித்துள்ள பதில் இதோ:

"நண்பர்கள் கண்களில் யோபு மனிதப்பிறவியைச் சேராத ஓர் அரக்கனாகத் தெரிந்தார். யோபின் வாழ்வும், குணங்களும், அவர்கள் உருவாக்கி வைத்திருந்த நன்னெறி, மற்றும் இறையியல் கருத்துக்களுக்கு பொருந்தாமல் போயின. இவ்வளவு துன்பத்தின் நடுவிலும், தன்னை ஒரு குற்றவாளியென யோபு ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை..." என்று பேராசிரியர் பிரவுன் அவர்கள் இம்மூன்று நண்பர்களைப் பற்றி சொல்லும்போது, அம்மூவரும் எப்படி தங்கள் கருத்துக்களால் சிறைப்பட்டிருந்தனர் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

உடைமைகளை, குழந்தைச் செல்வங்களை, உடல் நலனை இழந்து, துன்பத்தில் சிக்கியிருந்த யோபைக் காட்டிலும், மாற்றமுடியாத கருத்துக்களில் சிக்கி, சிறைப்பட்டிருந்த மூன்று நண்பர்களை, யோபு நூலின் ஆசிரியர், பரிதாபத்திற்குரியவர்களாக சித்திரிக்கிறார். இம்மூவரும் யோபு மீது மேற்கொண்ட முதல் சுற்று தாக்குதல்களுக்குப் பின், இரண்டாம் சுற்று தாக்குதல்கள் தொடர்ந்தன. யோபின் நண்பர், பில்தாது, தன் இரண்டாவது சுற்று தாக்குதலை, வெகுக் கடுமையாகத் துவக்குகிறார்:

யோபு நூல் 18: 2-3

எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்துப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம். மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

இவ்வாறு, காரசாரமாக, தன் தாக்குதலைத் துவக்கிய பில்தாது, தொடர்ந்து, 'தீயோர் அடையும் தவிர்க்கமுடியாத முடிவை'ப்பற்றி விவரிக்கிறார். தீயோரின் முடிவு என்று அவர் பொதுப்படையாகப் பேசினாலும், அவர் தொகுத்து வழங்கும் துன்பப் பட்டியல், யோபு அனுபவித்தக் கொடுமைகளைச் சுட்டிக்காட்டுகிறது.

'எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.' (யோபு 18:11) என்று அவர் குத்திக்காட்டுவது, யோபு நூல் முதல் பிரிவில், வெவ்வேறு இடங்களிலிருந்து, யோபின் பணியாளர்கள், ஒருவர் பின் ஒருவராக கொணர்ந்த அதிர்ச்சிகளை நினைவுறுத்துகிறது. 'நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.' (யோபு 18: 13) என்றும், 'அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை; அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.' (யோபு 18:19) என்றும், பில்தாது சொல்வது, யோபின் நோயையையும், அவர் தன் பிள்ளைகளை இழந்ததையும், குத்திக்காட்டுகிறது. இரக்கமற்ற இத்தாக்குதலுக்கு யோபு கூறும் பதிலுரை, நம் அடுத்தத் தேடலில் இடம்பெறும்.

இன்றையத் தேடலின் இறுதியில், மே 10ம் தேதி இப்புதனன்று, சிறப்பிக்கப்படும் புத்தரின் பிறந்தநாளைக் குறித்து, ஒரு சில சிந்தனைகளை மேற்கொள்வோம். கௌதம புத்தரின் பிறந்தநாள், 'புத்த பூர்ணிமா', 'வேஸாக்' என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, புத்தமத நண்பர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துமடல், நம் அனைவருக்கும் சில அழகியப் பாடங்களைச் சொல்லித் தருகிறது. இம்மடலில் கூறப்பட்டுள்ள சில கூற்றுகள், இன்றைய நம் தேடலை நிறைவு செய்யட்டும்:

"அமைதியும், வன்முறையற்ற நிலையும் கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பது, மிக அவசரத் தேவை என்பதை இவ்வாண்டு சிந்திப்போம். மத நம்பிக்கை கொண்ட பலர், அமைதியையும், வன்முறையற்ற நிலையையும் வளர்க்க அரும்பாடு படுகின்றனர். அதேவேளை, வேறு சிலர், மதத்தின் பெயரால், வன்முறையையும், வெறுப்பையும் வளர்க்கின்றனர்...

இயேசு கிறிஸ்துவும், புத்தரும் அகிம்சையை வளர்த்தவர்கள், சமாதானத்தை உருவாக்கியவர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதி நாளுக்கென வழங்கியச் செய்தியில், 'வன்முறை நிறைந்த காலத்தில் இயேசு வாழ்ந்தார். அமைதியும், வன்முறையும் சந்திக்கும் போர்க்களமாக விளங்குவது, மனித மனமே' என்று கூறியுள்ளார்...

புத்தரும், அமைதி, வன்முறையற்ற நிலை ஆகியவற்றை தன் செய்திகளில் கூறியுள்ளார்: 'கோபம் கொள்பவரை, கோபமற்ற நிலையால் வெல்க; தீமை செய்வோரை, நன்மைத்தனத்தால் வெல்க; பொய்சொல்வோரை, உண்மையால் வெல்க' (தம்மப்பதா 17,3) என்று கூறியுள்ளார்.

தன்னைத்தானே வெல்வது ஒன்றே அனைத்து வெற்றிகளையும்விட மிகச் சிறந்தது என்பதை வலியுறுத்த, 'ஒருவர் ஆயிரம் மனிதர்களை, ஆயிரம் போர்க்களங்களில் வென்றாலும், தன்னைத்தானே அவர் வெல்வது மட்டுமே உன்னத வெற்றியாகும்' (தம்மப்பதா 7,4) என்று புத்தர் கூறியுள்ளார்."

பொருள் செல்வங்களையும், பிள்ளைச் செல்வங்களையும், இழந்து, உடல் நலனையும் இழந்து தவித்த யோபின் மீது, மேலும் வன்முறைகளை மேற்கொண்ட மூன்று நண்பர்கள், தாங்கள் உருவாக்கி வைத்திருந்த கடவுள், மதம் என்ற கருத்துக்களின் அடிப்படையில் இத்தகையத் தாக்குதல்களை மேற்கொண்டனர். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இன்று வன்முறைகளை மேற்கொள்ளும் பலரை, இந்த மூன்று நண்பர்களும் நமக்கு நினைவுறுத்துகின்றனர்.

வன்முறை நிறைந்த இவ்வுலகில், நாம், அமைதியைக் கொணர்வதற்கு, புத்தரின் பிறந்தநாளன்று இறைவனிடம் சிறப்பாக செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.