2017-05-08 16:36:00

போர்த்துக்கீசிய பாப்பிறை கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை


மே,08,2017. இயேசுவின் அன்பில் உயர்வதற்கு உதவும் வகையில், நம் கரங்களைப் பற்றி வழிநடத்தும் அன்னை மரியாவின் கரங்களில் நம்மை ஒப்படைப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள்பணி பயிற்சி பெறும் மாணவர்களிடம் உரையாற்றினார்.

உரோம் நகரிலுள்ள போர்த்துக்கீசிய பாப்பிறை அருள்பணி பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இவ்வாரத்தின் இறுதியில் போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகருக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் தருணத்தில் இந்த சந்திப்பு நிகழ்வது, முக்கியத்துவம் நிறைந்தது என்று கூறினார்.

அருளாளர்கள் பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா, இறையடியார் லூசியா போன்றோரின் விசுவாச வாழ்வைப் பின்பற்றி, அருள்பணியாளர்கள், இறைவனிடம் தங்களையே ஒப்படைக்க வேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை முன்வைத்தார்.

ஒவ்வோர் அருள் பணியாளரும் தன் கிறிஸ்தவ, குருத்துவ மேய்ப்புப்பணி மற்றும் கலாச்சார பயிற்சியில் சோர்வின்றி ஈடுபடவேண்டும் என்று, அருள்பணி பயிற்சி பெறும் மாணவர்களிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையாக இருக்கவும், அதேவேளை, அஞ்சா நெஞ்சுடன் செயலாற்றவும் அன்னை மரியிடமிருந்து கற்றுக்கொள்வோமாக என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.