2017-05-08 16:42:00

திருத்தந்தை: இரட்டை வாழ்க்கை என்பது ஒரு மோசமான நோய்


மே,08,2017. எத்ததகையத் துன்பத்திலும் இயேசுவுக்குப் பணியாற்றுவதில் மகிழ்ச்சியைக் காண்போம், இரட்டை வாழ்க்கை என்பது ஒரு மிகப் பெரிய கொடிய நோயாகும் என இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரிலுள்ள பல்வேறு அருள்பணியாளர் பயிற்சி இல்லங்களில் பயின்றுவந்த 10 தியாக்கியோன்களை, அருள்பணியாளர்களாக அருள்பொழிவுச் செய்த திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருத்துவம் என்பது ஒரு வேலை அல்ல, மாறாக அது ஒரு பணியாகும் என்றார்.

இறைவார்த்தையை வாசித்து தியானிக்கும் ஒவ்வொரு அருள்பணியாளரும், தான் வாசித்தவற்றை நம்பவும், விசுவாசம் வழியாக தான் கற்றவற்றை, பிறருக்கு கற்பிக்கவும், தான் கற்பித்தவற்றை வாழ்ந்துகாட்டவும் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர் வழங்கும் மறையுரைகள், கல்வியறிவில் மேம்பட்டதாகவோ, விளக்கம் நிறைந்ததாகவோ இருக்கத் தேவையில்லை, அவை எளிமையாக இருக்கவேண்டும் என்பதே முக்கியம் எனவும் எடுத்துரைத்தார்.

வாழ்விலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கூறாமல், சொல்லப்படும் வார்த்தைகள் அர்த்தமற்றவை என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இரட்டை வாழ்க்கை என்பது திருஅவையில் ஒரு நோயாக உள்ளது எனவும் எடுத்தியம்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.