2017-05-05 16:40:00

திருப்பீடம்,மியான்மார் தூதரக உறவுக்கு வரவேற்பு


மே,05,2017.  மியான்மார் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே, தூதரக உறவுகளை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம், மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைகளில் நல்லதொரு பரிணாமமாக உள்ளது என்று, மியான்மார் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், மியான்மார் அரசின் முதன்மை ஆலோசகரும், வெளியுறவு அமைச்சரும், ஆளுங்கட்சியான தேசிய குடியரசு கட்சியின் தலைவருமான ஆங் சான் சூ சி அவர்களுக்கும் இடையே, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் இத்தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

இத்தீர்மானம் குறித்து பீதேஸ் செய்தியிடம் கருத்து தெரிவித்த, Pathein மறைமாவட்ட ஆயர், John Hsane Hgyi அவர்கள், மியான்மாரில் அனைத்து மதத்தினரும் அமைதியை விரும்புகின்றனர், ஆயினும், அந்த அமைதியை எட்டுவதற்கு ஒவ்வொரு குடிமகனின் முயற்சி அவசியம் என்று தெரிவித்தார்.

மியான்மார் கத்தோலிக்கத் திருஅவை, 2017ம் ஆண்டை, அமைதி ஆண்டாகக் கடைப்பிடித்துவரும்வேளை, நாட்டில் அமைதி நிலவுவதற்கு, செபம், உண்ணா நோன்பு, தியாகம் போன்றவற்றைக் கடைப்பிடித்து, நாட்டில் அமைதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு, கத்தோலிக்கர் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஆயர் John Hgyi அவர்கள் கூறினார்.

சிறுபான்மை இனங்களுடன் இடம்பெறும் மோதல்களுக்குத் தீர்வு காண்பது, மியான்மாரின் முக்கிய சவாலாக உள்ளது எனவும், இம்மாதம் 24ம் தேதி, யாங்கூனில் நடைபெறும் தேசியக் கூட்டத்தில், அனைத்து இனக் குழுக்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று, தான் நம்புவதாகவும் கூறினார், ஆயர் ஆயர், John Hgyi.

இந்த ஒப்பந்தம், தேசிய ஒப்புரவை நோக்கி எடுக்கப்படும் உண்மையான நடவடிக்கையாக இருக்குமென உரைத்த ஆயர், John Hgyi அவர்கள், Rohingya முஸ்லிம்களுடன் கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்றும் கூறினார்.     

மியான்மாரின் ஐந்து கோடியே பத்து இலட்சம் மக்களில், ஏறக்குறைய ஒரு விழுக்காட்டினரே கத்தோலிக்கர். ஆயினும், அந்நாட்டில், ஐந்து நூற்றாண்டுகளாக திருஅவை செயல்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டில், இந்த 500ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.