2017-05-05 15:32:00

திருஅவையில் சாந்த குணம் வளர திருத்தந்தை அழைப்பு


மே,05,2017. தங்களின் பாவங்களை மூடிமறைப்பதற்காக, கண்டிப்பான ஒரு போக்கைப் பயன்படுத்தும் மக்கள், திருஅவையில் இன்றும் உள்ளனர் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

கடின உள்ளம் கொண்டிருந்த அடக்குமுறையாளராக இருந்து, பின், சாந்தமும், பொறுமையும் நிறைந்த நற்செய்தி அறிவிப்பாளராக மாறிய, புனித பவுல் பற்றிக் கூறும், இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை (தி.பணி.9,1-20) மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, கடின மனநிலையைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களை எச்சரித்தார், அதேவேளை, திருஅவையில் சாந்த குணம் வளர அழைப்பு விடுத்தார்.

புனித ஸ்தேவான் கல்லால் எறியப்பட்ட நிகழ்வில், சவுல் என்ற பெயர் முதலில் இடம்பெறுகின்றது என்றும், சவுல், இளைஞராக, கடினமனம் கொண்டவராக, குறிக்கோளை அடைய விரும்புவராக, மற்றும், சட்டத்தில் பற்றிக்கொண்டவராக இருந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

சவுல், கடின மனத்தவராக, அதேநேரம் நேர்மையுள்ளவராக இருந்தார் என்று கூறியத் திருத்தந்தை, சட்டத்தில் கண்டிப்புள்ளவராக இருந்து, வாழ்வில் நேர்மையின்றி இருக்கும் இரட்டைவேட வாழ்வை இயேசு கண்டிக்கிறார் என்று கூறினார்.

கடின மனத்தவராக இருப்பவர்கள், இரட்டை வேட வாழ்வு வாழ்பவர்கள் என்றும், இன்றையத் திருஅவையில், பல இளையோர் கடின மனத்தவராய் வாழும் சோதனைக்கு உள்ளாகின்றனர் என்றும், சிலர் நேர்மையாகவும், நல்லவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, சாந்தமான பாதையில் இளையோர் வளர ஆண்டவரிடம் செபிப்போம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.