2017-05-05 16:34:00

சமயசுதந்திரம் குறித்த விதிமுறைக்கு சமயத் தலைவர்கள் வரவேற்பு


மே,05,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், கையெழுத்திட்டுள்ள சமய சுதந்திரம் குறித்த விதிமுறையை, அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள் உட்பட, பல சமயத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இவ்வியாழனன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, தேசிய செப நாள் நிகழ்வில், சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விதிமுறையில் கையெழுத்திட்டார் அரசுத்தலைவர் டிரம்ப்.

வாஷிங்டன் கர்தினால், Donald Wuerl, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் Galveston-Houston பேராயர், கர்தினால், Daniel N. DiNardo  ஆகியோர் உட்பட பல சமயத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

மதத்தின் பெயரால் இடம்பெறும் பாகுபாடுகளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளாது எனவும், சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அமெரிக்க அரசு முயற்சிக்கும் எனவும், இந்நிகழ்வில் தெரிவித்தார், அரசுத்தலைவர் டிரம்ப்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில், கருத்தடை சாதனங்களுக்கு எதிரான நடவடிக்கையில் பிரச்சனைகளை எதிர்நோக்கும், ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையின் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அச்சபை சகோதரிகளிடம், டிரம்ப் அவர்கள் உறுதி கூறினார் என, CNS கத்தோலிக்க செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.