2017-05-04 16:29:00

மக்களின் மகிழ்வுக்கும், கவலைக்கும் செவிமடுக்கும் திருஅவை


மே 04,2017. கத்தோலிக்கத் திருஅவை, எப்போதும் பயணிக்கும் திருஅவையாக, மக்களின் மகிழ்வு, கவலை இவற்றிற்கு செவிமடுக்கும் திருஅவையாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருத்தந்தை வழங்கிய மறையுரையில், திருத்தூதர் பணிகள் நூலில், பிலிப்பு, எத்தியோப்பிய அரச அலுவலரைச் சந்திக்கும் நிகழ்வை மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

போதித்தல், திருமுழுக்கு, மனமாற்றங்கள், புதுமைகள், பெரும் இன்னல்கள் என்ற அனைத்தையும் உள்ளடக்கிய, திருத்தூதர் பணிகள் நூல், முதல் 8 பிரிவுகள், திருஅவை வரலாற்றின் சுருக்கம் என்று கூறலாம் என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இன்றைய வாசகத்தில், 'நீ எழுந்து போ' என்று, தூய ஆவியார், பிலிப்பை நோக்கி கூறியதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அவரவர் தங்கள் இல்லங்களில் அமர்ந்திருப்பதற்கல்ல, மாறாக, எழுந்து வெளியேச் செல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே, திருஅவையின் முக்கிய பண்பு என்று கூறினார்.

தொடுவானங்கள் அற்ற மூடிய இடத்தில், நமக்குள் நாமே அடைபட்டுக் கொண்டு, அங்கு புறணிப்பேசுவதற்குப் பதில், வெளியேறிச் சென்று, நற்செய்தியைப் பகிர்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்..

தேரை நெருங்கிச் சென்ற பிலிப்பு, அரச அலுவலரின் கேள்விகளை, கவலைகளைப் பகிர்ந்துகொண்டதுபோல், திருஅவையும், மனிதர்களின் கவலைகளுக்கு கவனமுடன் செவிமடுக்க, தூய ஆவியார் அழைப்பு விடுக்கிறார் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.

செல்லும் வழியில் திருமுழுக்கு பெற்ற எத்தியோப்பிய அரச அலுவலர், மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார் என்று வாசகத்தில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புறப்பட்டுச் செல்லுதல், கவலைகளுக்கு செவிமடுத்தல், மகிழ்வோடு திரும்புதல் ஆகியவை, திருஅவைக்கே உரிய செயல்பாடுகள் என்று கூறினார்.

மேலும், "கிறிஸ்து மட்டுமே அளிக்கக்கூடிய புத்துணர்வால் வியப்படைவதற்கு நம்மையே அனுமதிப்போமாக! அவரது கனிவும், அன்பும், நம் பாதங்களை வழிநடத்துவனவாக" என்ற அழகான அழைப்பை, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.