2017-05-04 14:59:00

பாசமுள்ள பார்வையில்.. புறக்கணிப்பிலும் மகனை வாழ்த்திய தாய்


ஆப்ரிக்கத் தாய் ஒருவர் ஒருநாள், தனது குடிசை வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அதிகாலையில், தண்ணீர் எடுக்கச் சென்றார். அந்நேரத்தில், அவரின் ஆறு வயது மகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தான். இருபது நிமிடங்கள் கழித்து தண்ணீருடன் திரும்பி வந்தபோது, குடிசை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அப்பெண்ணின் கணவரும் ஊர் மக்களும் செய்வதறியாது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் வீட்டின் உள்ளே தனது ஒரே மகன் தூங்குகிறான் என்பதை உணர்ந்த தாய், பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டில் நுழைந்து மகனை தூக்கி வந்தார். மகனுக்கு இலேசான தீக்காயங்கள். ஆனால் தாயின் முகத்திலும், மற்ற பகுதிகளிலும் பலத்த தீக் காயங்கள். இந்நிலையில் தந்தை அவ்விருவரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். சிகிச்சை முடிந்து மகனை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தார் தாய். மகனும் நன்றாகப் படித்தான். உயர் படிப்புக்காக நகரத்திற்கு அனுப்பினார் தாய். படித்து பட்டம் பெற்ற மகன், அதன்பின் தாயைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவன் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினான். பலருக்கு அதில் அவன் வேலை கொடுத்தான். மகனின் இந்நிலை பற்றி அறிந்த தாய் பெருமிதம் அடைந்தார். ஒரு நாள், தீக்காயம் பட்ட தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு அவனைப் பார்க்கச் சென்றார் தாய். மகனின் நிறுவனத்தின் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம், உங்கள் நிறுவனத் தலைவரைப் பார்க்க வந்துள்ளேன், நான் அவரின் தாய் என்றார். அந்தப் பெண்ணும், தலைவரின் அறைக்கு தகவல் சொல்லி அனுப்பினார். அப்போது அந்த மகன், எனக்கு அம்மா கிடையாது, அந்தப் பெண்ணை திருப்பி அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனால், அந்நேரத்திலும் அத்தாய் சொன்னார் - நான் என் மகனை நினைத்து பெருமிதம் அடைகிறேன். இவன் இந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காகவே நான் உழைத்தேன் என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.