2017-05-04 17:08:00

அமெரிக்க ஐக்கிய நாட்டில் புனித பியோவின் திருப்பண்டங்கள்


மே 04,2017. புனித பாத்ரே பியோ அவர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை, மே மாதம் 6, இச்சனிக்கிழமை முதல், அக்டோபர் 1ம் தேதி முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களில், பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று, CNA கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.

புனித பியோ அவர்கள் பிறந்ததன் 130 ஆண்டையும், அவர் புனிதராக உயர்த்தப்பட்டதன் 15ம் ஆண்டையும் சிறப்பிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

1887ம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி, இத்தாலியின் Pietrelcinaவில் பிறந்த புனித பியோ, 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி, தன் 82வது வயதில் இறையடி சேர்ந்தார். அவரை, 2002ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், புனிதராக உயர்த்தினார்.

மே மாதம் 6 முதல் 21 முடிய பிலடெல்பியா, டென்வர், லாஸ் ஆஞ்செலஸ் உட்பட ஆறு மறைமாவட்டங்களில் பவனி வரும் இத்திருப்பண்டங்கள், பின்னர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 1ம் தேதி முடிய இரண்டாவது சுற்றை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், கல்வி, உடல்நல பராமரிப்பு ஆகிய துறைகளில் பிறரன்புப் பணிகளை மேற்கொண்டுவரும், புனித பியோ அறக்கட்டளை, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி கொண்டாடப்பட்ட வேளையில், இரக்கத்தின் தூதர்கள் என்ற முறையில், புனித பாத்ரே பியோ மற்றும் புனித லியோப்போல்தோ மாண்டிச் ஆகியோரின் திருப்பண்டங்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.