2017-05-03 17:09:00

மும்பை மாநகராட்சியின் அத்துமீறிய செயல் - கர்தினால் கிரேசியஸ்


மே 03,2017. மும்பையின் Bandra பகுதியில் மும்பை மாநகராட்சி சிலுவை ஒன்றை இடித்துத் தள்ளியது, சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறிய ஒரு செயல் என்றும், மத உணர்வுகளைத் தூண்டிவிடும் முயற்சி என்றும், மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

1890களில், ஏற்பட்ட கொள்ளைநோய் தாக்குதலின்போது நிறுவப்பட்ட இந்தச் சிலுவை, தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது என்றும், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இச்சிலுவை, எவ்வகையிலும்  பொது மக்களுக்கு இடையூறாக இருந்ததில்லை என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

தனிப்பட்டவர்க்குச் சொந்தமான ஒரு இடத்தில் அத்து மீறி நுழைந்து, அவருக்குரிய சொத்தை நாசம் செய்த மாநகராட்சியின் செயல், கண்டனத்திற்குரியது என்று, மும்பை உயர் மறைமாவட்ட பிரதிநிதி, அருள்பணி Antony Charangat அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏப்ரல் 29, கடந்த சனிக்கிழமை, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த இடிபாடு முயற்சி, அண்மைய மாதங்களில் மும்பையில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கும், கிறிஸ்தவ உருவச்சிலைகளுக்கும் செய்யப்பட்டுள்ள நிந்தனைகளின் ஒரு தொடர்ச்சியாக உள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இடிக்கப்பட்ட சிலுவை இருந்த இடத்தில் மற்றொரு சிலுவையை நிறுவி, மக்கள் அதைச் சுற்றி வணக்கம் செலுத்தி வருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.