2017-05-03 16:03:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 15


மே,03,2017. கிறிஸ்தவத்தின் இரு பெரும் தூண்களாக நோக்கப்படுபவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும், பவுலும். நீரோ என்ற இரத்தவெறி பிடித்த மன்னன் உரோமைப் பேரரசை ஆட்சி செய்த காலத்தில், இவர்கள் இருவருமே பல சித்ரவதைகளுக்கு உள்ளாகி, மறைசாட்சிகளாக, உரோமையில் கொல்லப்பட்டவர்கள். மறைசாட்சிகளின் இரத்தம் திருஅவையின் வித்து என, 2ம் நூற்றாண்டு திருஅவைத் தந்தை தெர்த்தூலியன் அவர்கள் கூறியுள்ளது போன்று, இவ்விருவரின் இரத்தமும் திருஅவையின் வித்தாக, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளாக, கிறிஸ்தவம் வளர்ந்து வருகிறது. இவர்கள் இருவரின் விழா, ஜூன் 29ம் நாளில் சேர்ந்தே சிறப்பிக்கப்படுகிறது. திருத்தூதர் பணிகள் நூலில், முதல் 12 பிரிவுகள் திருத்தூதர் பேதுரு பற்றியும், 13ம் பிரிவிலிருந்து 28வது இறுதிப் பிரிவு வரை, திருத்தூதர் பவுல் பற்றியும் சொல்கின்றன. மீனவரான, படிப்பறிவில்லாத பேதுரு, இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்து அவரின் போதனைகளையும், அவர் ஆற்றிய அற்புதங்களையும் நேரிடையாகக் கேட்டு, கண்டு, அனுபவித்தவர். உயிர்பெற்றெழுந்த இயேசுவைப் பார்த்தவர். எருசலேமில் பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்களுக்குத் தலைமை வகித்துப் பேசியவர். ஆனால் திருத்தூதர் பவுல், இயேசுவை, நேரிடையாகப் பார்த்ததில்லை, அவரோடு வாழ்ந்ததில்லை. ஆயினும், திருத்தூதர் பேதுருவுக்கு இணையாகப் பேசப்படுபவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இல்லாவிடினும், திருத்தூதர்கள் காலத்தில் மிக முக்கியமான ஒருவராகப் பொதுவாக நோக்கப்படுகிறார் பவுல். தொடக்கத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பவுல், இறுதியில், கிறிஸ்துவுக்காக, தலைவெட்டப்பட்டு இறந்தார்.

வாழும் இடமும், வாழ்விடச் சூழலும் நாம் எத்தகையவர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தகுந்த பங்கை ஆற்றுகின்றன என்று சொல்லலாம். திருத்தூதர் பவுல் அவர்களின் வாழ்வு, இதற்கு ஒரு சான்று. திருவிவிலியத்தில் பவுல் அவர்களது வாழ்க்கை பற்றி சுருக்கமாக இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. பவுல் பென்யமின் குலத்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில், கி.பி.10ம் ஆண்டளவில் பிறந்தார். இவரது யூதப் பெயர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் பகுதியான சிலிசியா மாநிலத்தின் உரோமைக் குடியிருப்பான தர்சு நகரத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவரது குடும்பத்திற்கு உரோமைக் குடியுரிமையும் இருந்தது. அக்காலத்தில், பல ஆண்கள் இரு பெயர்களைக் கொண்டிருந்தனர். உரோமைப் பேரரசில் தொழில் புரியும்போது உரோமையப் பெயரையும், தன் குடும்பத்தோடு அல்லது தொழுகைக்கூடத்தில் இருக்கும்போது யூதப் பெயரையும் இவர்கள் பயன்படுத்தினர். அதேபோல், பவுலும், சவுல் என்ற யூதப் பெயரையும், பவுல் என்ற உரோமையப் பெயரையும் கொண்டிருந்தார். இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும், நெறிமுறைகளையும் கற்றறிந்திருந்தார். உலகப் பொதுமொழியாக இருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் எருசலேம் சென்று, புகழ் பெற்ற கமாலியேல் என்னும் யூத ராபியிடம் கல்வி பயின்றார். யூதக் கோட்பாடுகளைக் கில்லேல் என்பவரது விளக்கங்களைத் தழுவிக் கடைப்பிடிக்கும், பரிசேயச் சமயப் பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பாலஸ்தீனத்தில் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

திருத்தூதர் பவுல் அவர்களை, முதலில், தொடக்ககாலக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் கூட்டத்தில்தான், நாம் சந்திக்கிறோம். மே 02, இச்செவ்வாய் திருப்பலியின் முதல் வாசகத்தில், புனித ஸ்தேவான் கல்லால் எறியப்பட்டு, மறைசாட்சியாக கொல்லப்பட்ட நிகழ்வு பற்றிக் கேட்டோம். இந்நிகழ்வில் ஸ்தேவானைத் துன்புறுத்தும் கூட்டத்தில் பவுல் இருந்தார். அச்சமயத்தில் சாட்சிகள், தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள், ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார் என்று திருத்தூதர்கள் பணி நூலில் வாசிக்கிறோம். அந்த அளவுக்கு பவுல், யூத மதத்தில் பற்றுக் கொண்டருந்தவர். கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்க காலத்தில், எருசலேம் திருஅவை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர, மற்ற அனைவரும், யூதேயா, சமாரியாவின் நாட்டுப்புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். சவுல், வீடு வீடாய் நுழைந்து ஆண்களையும், பெண்களையும் இழுத்துக்கொண்டு போய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு சவுல் திருஅவையை அழித்து வந்தார். சிதறிய மக்கள், தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். இந்நிலையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது. அதுவே, திருத்தூதர் பவுல் அவர்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டது. வாழ்வது நானல்ல, என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே என்று, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு வாழுமளவுக்கு அவரில் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னை உருவாக்குவதில் ஆர்வமிழந்து, கிறிஸ்துவே தனக்கு எல்லாம் என அவரை வாழ வைத்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.