2017-05-03 16:28:00

எகிப்து திருப்பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை


மே 03,2017. "நாம், மென்மை உள்ளமும், பணிவும் கொண்டவர்களாக, வறியோரைப் பேணுவதில் தனி கவனம் செலுத்துவோமாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், இப்புதனன்று பதிவு செய்திருந்தார்.

மேலும், இப்புதன் மறைக்கல்வி உரைக்கு வருகை தந்திருந்த எகிப்து நாட்டு திருப்பயணிகளுக்கு தனிப்பட்ட வாழ்த்துக்களை திருத்தந்தை தெரிவித்தார்.

அரேபிய மொழி பேசும் திருப்பயணிகளை, குறிப்பாக, எகிப்திலிருந்தும், மத்தியக் கிழக்கு பகுதியிலிருந்தும் வருகை தந்துள்ள திருப்பயணிகளை வாழ்த்துவதாக, திருத்தந்தை இத்தாலிய மொழியில் கூறியதை, ஒருவர் அரேபிய மொழியில் மொழிபெயர்த்தார்.

தன் திருத்தூதுப் பயணத்தை சாத்தியமாக்கிய எகிப்து மக்களுக்கு தன் தனிப்பட்ட நன்றிகள் என்று திருத்தந்தை கூறிய வேளையில், “ùm el dùgna”, அதாவது, 'உலகின் தாய்' என்று எகிப்து நாட்டை அரேபிய மொழியில் குறிப்பிட்டார்.

புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இளையோர், நோயுற்றோர் மற்றும் புதிதாக திருமணம் செய்துகொண்டோர் இவர்களை குறிப்பிட்டு வாழ்த்தியபின், நாம் துவங்கியுள்ள மரியன்னையின் வணக்க மாதமான மே மாதத்தில், எளிமையான, அதே வேளையில் சக்திமிகுந்த செபமாலையை செபிக்கும்படி இளையோரிடம் சிறப்பு வேண்டுகோளை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.