2017-05-02 16:23:00

சதுப்பு நிலங்களில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராய்...


மே,02,2017. இலங்கையில், Muthurajawela சதுப்பு நிலங்களில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் உட்பட, ஆயிரத்திற்கு மேற்பட்ட கத்தோலிக்கர் இரு பேரணிகளை நடத்தியுள்ளனர்.

அரிய வகைத் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும், பறவைகள் நிறைந்த இலங்கையின் மிகப் பெரிய Muthurajawela சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பாக, கத்தோலிக்கர், அரசு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் திருப்பலி நிறைவேற்றி, எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தியுள்ள கத்தோலிக்கர், இந்த சதுப்பு நிலங்களில் குப்பைகள் கொட்டப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  UCA செய்தியிடம் விளக்கிய அருள்பணி Dinush Gayan அவர்கள், கத்தோலிக்கர் நடத்திய எதிர்ப்புப் பேரணியின்போது, 150க்கும் மேற்பட்ட சிறப்பு காவல்படையினர் அதைக் கட்டுப்படுத்தி, அந்த சதுப்பு நிலங்களில் கட்டாயமாகக் குப்பைகளை வீசினர் எனத் தெரிவித்தார்.

Muthurajawela சதுப்பு நிலங்கள், தலைநகர் கொழும்பு நகருக்கு வடக்கே முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி குப்பைமேடு சரிந்ததில், 32 பேர் இறந்தனர், வீடுகள் சேதமாகின மற்றும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையே, கண்டி மாவட்ட கொஹாகல பகுதியில் ஏறக்குறைய 35 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில், அமைந்துள்ள பெரிய குப்பைமேடு, இடிந்து விழும் நிலையில் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.