2017-05-02 16:35:00

ஐ.நா.வில் பாத்திமா அன்னை மரியா திருவுருவம்


மே,02,2017.  போர்த்துக்கல்  நாட்டு பாத்திமாவில் அன்னை மரியா காட்சி கொடுத்ததன் நூறாம் ஆண்டு இம்மாதம் 13ம் தேதி சிறப்பிக்கப்படும்வேளை, இந்நிறைவைக் குறிக்கும் முறையில், பாத்திமா அன்னை மரியா திருவுருவம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறைவு நாளுக்கு முந்திய நாளான மே 12ம் தேதியன்று, பாத்திமா அன்னை மரியா திருவுருவம், ஐ.நா. நிறுவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது. இந்நிகழ்வில், EWTN தொலைக்காட்சியின் அருளின் பெண்கள் அமைப்பின் நிறுவுனரும், தலைவருமான Johnnette Benkovic அவர்களும் கலந்துகொள்வார். 

பாத்திமாவின் நூற்றாண்டு மற்றும், அன்னையின் அமைதியின் செய்தி என்ற தலைப்பில், இம்மாதம் 12ம் தேதி, முற்பகல் 11 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை இந்நிகழ்வு ஐ.நா.வில் நடைபெறும். இதில், போர்த்துக்கல் நாட்டு ஐ.நா. தூதுவர், Alvaro Mendonca, திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா உட்பட பலர் உரையாற்றுவார்கள்.   

இதற்குமுன், 1952ம் ஆண்டில், பாத்திமா அன்னை மரியா திருவுருவம், ஐ.நா. நிறுவனத்திற்கு முதன்முறையாகக் கொண்டுவரப்பட்டது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.