2017-05-01 15:31:00

வாரம் ஓர் அலசல் – மனித ஆர்வல உழைப்பாளர்கள்


மே,01,2017.  மனிதகுலம் இயங்குவதற்கும், வாழ்வதற்கும் அடிப்படையாக அமைவது, உழைக்கும் மக்களின் கரங்கள்தான். உணவுப்பொருள்களை உற்பத்தி செய்து அவற்றை உணவாக்கித் தருவது, விவசாயிகளின் வியர்வைதான். வாழ்வதற்கு வீடுகளையும், வழிபடுவதற்கு ஆலயங்களையும், பயணிப்பதற்கு வாகனங்களையும் உருவாக்கித் தருவதும், நம்மை வசதியாக வாழ வைப்பதும் உழைப்பாளர்களின் காய்த்துப் போன கரங்கள்தான். மே முதல் நாள், இந்த உழைப்பாளர்களின் பெருமையை உலகெங்கும் உரக்க உரைத்திடுகின்றது. ஒழுக்கமே உயர்வு, உழைப்பே திறமை என வாழ்பவர்கள் உழைக்கும் மக்கள். இம்மக்களில் சிலர், தங்களின் தன்னலமற்ற சேவைகளால், ஆரவாரமில்லாமல், சமூகத்திற்கு நற்சேவைகள் ஆற்றி வருகின்றனர். கோயம்புத்தூரில், லோகநாதன், சசிகலா தேவி தம்பதியர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆற்றிவரும் சேவையை, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. லோகநாதன் அவர்கள், ஒரு பணிமனையில், வெல்டிங் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். பள்ளிக்கூட வாசனையை அறியாத இவர், கல்வியின் பயனை உணர்ந்தவர். கல்வியினால் உயர்ந்தவர்களின் வாழ்வைப் பார்த்தார், அதேநேரம், குடும்ப வறுமையால் தொடர்ந்து படிக்க இயலாமல் இருக்கும் பிள்ளைகளையும் நோக்கினார். எனவே, இப்பிள்ளைகளுக்கு எந்த வழியிலாவது உதவ எண்ணினார் லோகநாதன். இதனால், தனது வேலை நேரம் போக, மற்ற நேரத்தில், வீடுகளில், அல்லது பொது இடங்களில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்த உதவியை ஆற்றி வருகிறார். இந்த வேலையில், இவருக்கு, ஒவ்வொரு வீட்டிலும், மாதம் நானூறு ரூபாய் கிடைக்கின்றதாம். இவரது மனைவி சசிகலா தேவி அவர்களும், சில ஆண்டுகள் சென்று, இவரோடு சேர்ந்து, இவ்வேலையைச் செய்து வருகிறார். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே இத்தம்பதியர், இதுவரை 1,200 பிள்ளைகள் படிக்க உதவியுள்ளனர். லோகநாதன் அவர்கள், இந்தச் சேவைக்கென வேறு யாரிடமும் உதவி கேட்பதில்லை. மேலும், இவர், தற்போது சொந்தமாக தொழில்பட்டறை ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தில் இரண்டு விழுக்காட்டை, ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காகச் செலவழிக்கவும் தீர்மானித்துள்ளார். இத்தம்பதியர், தங்களின் இரு பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளனர். பிறர்நலம் பேணும் இந்த படிக்காத மேதை உழைப்பாளர் தம்பதியரின் பகிர்வு இதோ....

உலக உழைப்பாளர் நாளில், லோகநாதன், சசிகலா தேவி தம்பதியர்க்கு, நம் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இத்தம்பதியரின் இச்செயல், படிக்க வசதியில்லாத பிள்ளைகளில், குறைந்தது ஒருவருக்காவது உதவும் மனப்பான்மையை நம்மில் வளர்ப்பதாக. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரத்தில், TED தொலைக்காட்சியில், காணொளிச் செய்தி வழியாகப் பேசுகையில், நீ, நான், என்ற தனிப்பட்டவர்கள் இணைந்தால், அங்கு உருவாகும், “நாம்” என்ற உணர்வு, இவ்வுலகில், ஒரு புரட்சியை, அதிலும், பரிவன்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சியை உருவாக்க முடியும் என்று கூறினார். நம்மால் தனியாகச் செய்ய இயலவில்லையென்றால், சிலராக இணைந்து நற்பணிகளை ஆற்றலாம். தினமலர் தினத்தாளில், ஒரு வாரத்திற்கு முன், “ஆனந்தம்” என்ற அமைப்பு பற்றி ஒரு தகவல் வெளியாகியிருந்தது. பணம் இல்லை என்ற காரணத்தால், ஏழை மாணவர்கள் படிப்பை விட்டுவிடக் கூடாதே என்ற அக்கறை கொண்ட இளைஞர்கள் சிலர், தங்களது ஊதியத்தில் இருந்து ஒரு தொகையைப் போட்டு இந்த அமைப்பை நடத்துகின்றனராம். ஹேமலதா என்ற மாணவிக்கு, இந்த அமைப்பு ஆற்றிய உதவியை, தினமலர் இவ்வாறு வெளியிட்டிருந்தது.

அரியலுார் மாவட்டம் திருமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. விவசாயக் கூலி வேலை பார்த்த அப்பா, உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஒய்வு எடுக்கவேண்டிய சூழ்நிலை. இதனால், குடும்பச் சுமையை ஏற்றார் படிக்காத அம்மா. கடனில் இரண்டு கறவை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்கிறார் அம்மா. அதில் வந்த வருமானம் குடும்பத்தைக் காப்பாற்ற போதவில்லை. எனவே, கறவை நேரம் போக, மீதி நேரத்தில், மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார் அம்மா. “நல்ல சாப்பாடு சாப்பிடனும், நாம நல்லபடியா வரணும்னா, அதற்கு ஒரே வழி படிப்புதான், நீங்க நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போகணும்னு” சொல்லிச் சொல்லியே பிள்ளைகளை வளர்க்கிறார் அம்மா. மூத்த பெண்ணான ஹேமலதா, உள்ளூர் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் 472 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் பிளஸ் டூ படிக்க கல்வி உதவித்தொகை கிடைத்தது. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஏற்பட்ட திடீர் காய்ச்சலால் ஹேமலதா மிகவும் பாதிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், பள்ளி நிர்வாகம், நூறு விழுக்காடு தேர்ச்சி பாதிக்கப்படும் என்று நினைத்து, ஹேமலதாவை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அப்போதெல்லாம், தாயாகவும் தோழியாகவும் கடவுளாகவும் இருந்து காப்பாற்றியவர் அவரின் அம்மாதான். உன்னால் முடியும் என்று சொல்லிச் சொல்லியே ஹேமலதாவை ஊக்கப்படுத்தினார். பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சி, மகளைத் தேர்வு எழுத வைத்தார். தேர்வு முடிந்து 1104 மதிப்பெண்கள் வந்த பிறகு, பக்கத்தில் உள்ள கலைக்கல்லுாரியில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து விண்ணப்பப் படிவம் வாங்கவே முடியவில்லை. அந்நேரத்தில் ஆனந்தம் அமைப்பு ஹேமலதாவிற்கு உதவியிருக்கிறது. இவரது படிப்பு, விடுதி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அந்த அமைப்பு பார்த்துக்கொண்டது. சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜியில் பி.இ. நான்காவது ஆண்டு படிப்பு முடிவதற்கு முன்பாகவே, வளாக நேர்காணலில், ஐ.பி.எம்மில் தேர்வாகிவிட்டாராம் ஹேமலதா.

டெல்லியில் வாழும் 66 வயது நிரம்பிய Suraj Prakash Vaid அவர்கள், வாடகைக் கார் ஓட்டி வந்தவர். இவர், டெல்லியிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு நன்றாக அறிமுகமானவர். “பொன்னான நேரத்தின் மனிதர்” என, இவர் அழைக்கப்படுகிறார். ஏனென்றால், சாலை விபத்துக்களில் கடுமையாய் காயப்பட்டவர்களை, அடுத்த அறுபது நிமிடங்களுக்குள், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இவர் சேர்த்து விடுகிறார். சாலையில் போவோர் வருவோர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கையில், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, இந்த நல்ல சேவையை ஆற்றி வருகிறார் Vaid. BBC ஊடகத்திடம் தனது இந்தப் பணி பற்றிப் பகிர்ந்துகொண்ட Vaid அவர்கள், விபத்துக்களில் சிக்கிய 92 பேர் பற்றி, இதுவரை காவல்துறையில் பதிவு செய்துள்ளேன், நேரடி சாட்சியாக நீதிமன்றம் சென்றுள்ளேன், இவர்கள் வைத்திருந்த விலையுயர்ந்த பொருள்களை, அவர்களின் உறவினர்கள் வரும்வரையில் வைத்திருந்து கொடுத்துள்ளேன் எனச் சொல்லியுள்ளார். விபத்து நடந்த முதல் அறுபது நிமிடங்களுக்குள், பாதிக்கப்பட்ட மனிதர்கள் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றால், இந்தியாவில், சாலை விபத்துக்களால் இறப்பவர்களில் ஐம்பது விழுக்காட்டினரைக் காப்பாற்ற முடியும் என்று, இந்தியாவின் சட்டத்துறை கூறுகிறது. இந்தியாவில், சாலை விபத்துக்களால், ஒவ்வோர் ஆண்டும், ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.    

மற்றவரின் வாழ்வு மேம்பட, எந்த கைம்மாறும் எதிர்பாராமல், தன்னலமின்றி சேவையாற்றும் நல் உள்ளங்களை வாழ்த்துவோம், பாராட்டுவோம், ஊக்கப்படுத்துவோம். நாமும் அவர்கள் வழியைப் பின்பற்ற முயற்சிப்போம்.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளது போன்று, “இவ்வுலகை மாற்றும் சக்தியும், அதிகாரமும், அரசியல்வாதிகள் மற்றும், தலைவர்களிடம் மட்டும் இல்லை, நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால், பரிவன்பின் அடிப்படையில் ஒரு புரட்சியை கொணர முடியும்”. “நீங்கள் சூரியனைப் போல் ஒளிரவேண்டுமென்றால், சூரியன் போல் நீங்கள் ஒளிர வேண்டும்” என்றார் அப்துல் கலாம். சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.