2017-04-29 17:20:00

துறவியர், அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை


ஏப்.29,2017. அன்பு சகோதர, சகோதரிகளே! As-salamu alaykum! சமாதானம் உங்களோடு இருப்பதாக! "இறைவன் படைத்த நாளிது, அவரில் அகமகிழ்வோம்! கிறிஸ்து சாவின்மீது நிரந்தரமாக வெற்றிகொண்டார், அவரில் அகமகிழ்வோம்!"

எகிப்து கத்தோலிக்கத் திருஅவையின் இதயமாக விளங்கும், அருள்பணியாளர்கள் பயிற்சி இல்லத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. பல்வேறு பிரச்சனைகள் நடுவே, நீங்கள் இந்நாட்டில் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கு, உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்." (லூக்கா 12:32)

அழிவையும், கண்டனங்களையும் முழக்கமிடும் பல போலி  இறைவாக்கினர்களின் குரலால் மனம் தளர்வதற்கு காரணங்கள் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து நேர்மறையான சக்தியாக, இவ்வுலகின் உப்பாக, ஒளியாக வாழ்வீர்களாக!

அர்ப்பணிக்கப்பட்டோராக, அருள்பணியாளர்களாக நீங்கள், நம்பிக்கையை விதைக்க, உறவுப் பாலங்களை அமைக்க, அழைக்கப்பட்டுள்ளீர்கள். இதைச் செய்வதற்கு நீங்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை வெல்லவேண்டும். ஒரு சில சோதனைகளை வெளிச்சமிட்டு காட்ட விழைகிறேன்.

1. நாம் மற்றவர்களை வழி நடத்திச் செல்வதற்குப் பதில், மற்றவர்கள் நம்மை வழி நடத்திச் செல்வதற்கு அனுமதிக்கும் சோதனை. நல்ல ஆயன், நீர் நிலைகளுக்கும், பசும் புல்வெளிகளுக்கும் ஆடுகளை அழைத்துச் செல்லவேண்டும். ஏமாற்றம், எதிர்மறை உணர்வுகளால் மனம் சோர்ந்து, 'என்னால் என்ன செய்யமுடியும்?' என்று கேட்பது, பெரும் சோதனை.

2. அனைத்திலும் குறைகாண்பது மற்றோரு சோதனை. அடுத்தவரை, குழுமத் தலைவரை, திருஅவையை, சமுதாயத்தை குறை சொல்வது எளிது. அர்ப்பணிக்கப்பட்டோர், தடைகளை, வாய்ப்பாகவும் காண வேண்டுமே தவிர, தடைகளைக் கண்டு செயலற்று போகக்கூடாது.

3. பொறாமைப்படுவது, புறணி பேசுவது மற்றொரு சோதனை. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோர், ஒருவரை ஒருவர் கட்டியெழுப்புவதற்குப் பதில், அடுத்தவரைப் பற்றி புறணி பேசி, அவர்கள் வளர்ச்சியைக் கெடுப்பது மிகப் பெரும் சோதனையாக அமைகிறது. புறணி பேசுவது, பிளவுகளை உருவாக்கும் சக்திமிகுந்த கருவி.

4. நம்மையே மற்றவரோடு ஒப்பிடும் சோதனை. வேறுபட்ட திறமைகள் நம்மை அழகுபடுத்தும் கொடை. அதைவிடுத்து, அடுத்தவரோடு நம்மை ஒப்புமைப்படுத்தி வாழ்வதால், செயலற்றுப் போகிறோம். வெவ்வேறு திறமைகள் கொண்ட புனித பேதுரு, பவுல் இருவரிடமிருந்தும் பாடங்களைப் பயில்வோம்.

5. பார்வோனாக மாறும் சோதனை. பார்வோனைப்போல, இறைவனுக்கும், நம் சகோதர, சகோதரிக்கும் உள்ளத்தை மூடிவிடும் சோதனையால், நாமே அனைத்தும் அறிந்தவர்கள் என்று வாழ்வது ஆபத்து. இந்த ஆபத்தைக் களையும் சிறந்த வழி: "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" (மாற்கு 9:35)

6. தனித்துவம் என்ற சோதனை. நம்பிக்கை கொண்டோரின் குழுமமே, திருஅவை, கிறிஸ்துவின் உடல். இங்கு ஒவ்வோர் உறுப்பினரின் மீட்பு அடுத்தவருடன் இணைக்கப்பட்டுள்ளது. (காண்க. 1 கொரி. 12:12-27) இதற்கு மாறாக, தனித்துவம், திருஅவையின் பெரும் இடறலாக செயல்படுகிறது.

7. எவ்வித குறிக்கோளும், திசையும் இன்றி அலைந்து திரியும் சோதனை. எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காமல், இறைவனுக்கும், உலகிற்கும் இடைப்பட்ட ஒரு தடுமாற்றமான நிலையில் வாழ்வது ஆபத்து.

கடினமான துறவு வாழ்வை மேற்கொண்ட பலர், எகிப்து நாட்டில் வாழ்ந்துள்ளனர். எனவே, தவ முனிவரான புனித பவுல், புனித அந்தோனி, பாலை நிலத்து தந்தையர் ஆகியோரின் எடுத்துக்காட்டான வாழ்வு, நமக்கு, தூண்டுதலாக அமைவதாக!

திருக்குடும்பம், உங்கள் அனைவரையும், இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும், ஆசீர்வதித்து காப்பதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.