2017-04-29 17:29:00

திருத்தந்தை 2ம் Tawadrosக்கு திருத்தந்தையின் வாழ்த்துரை


ஏப்.29,2017. திருத்தந்தையே, அன்பு சகோதரரே!

சில நாட்களுக்கு முன்னர், உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் கொண்டாடும் ஆசீரை, இவ்வாண்டு, நாம் அடைந்தோம். இப்போது, நாம் ஒன்றாக இணைந்து, உயிர்ப்பின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறோம். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

நான் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் என்னைச் சந்திக்க நீங்கள் உரோம் நகருக்கு 2013ம் ஆண்டு மே 10ம் தேதி வந்ததை இப்போது மகிழ்வுடன் நினைவுகூருகிறேன். காப்டிக் வழிபாட்டு முறையினருக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே உருவான நட்பின் நாள் என்று, அந்நாளை எண்ணிப்பார்க்கிறேன்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கி நாம் மேற்கொண்டுள்ள இப்பயணத்தின் ஒரு மைல்கல்லாக, 1973ம் ஆண்டு, மே 10ம் தேதி, பேதுரு, மாற்கு திருப்பீடங்களுக்கிடையே உருவான ஒப்பந்தத்தை குறிப்பாக நினைவுகூர விழைகிறேன். நம்மிடையே நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மத்தியில், இயேசு கிறிஸ்து, உண்மையான, முழுமையான கடவுள் என்றும், உண்மையான, முழுமையான மனிதன் என்றும் ஏற்றுக்கொள்வதில், அன்று நமக்குள் ஏற்பட்ட உடன்பாடு, மிக முக்கியமானது.

நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதால், நாம் ஒவ்வொருவரும் நமது வழியிலேயே செல்வது குறித்து எண்ணாமல், இணைந்து செல்வது குறித்து சிந்திக்கவேண்டும். நமது கிறிஸ்தவ ஒன்றிப்பு, நாம் பயன்படுத்தும் சொற்கள், செயல்கள், பணிகள் இவற்றில் மட்டும் வெளிப்படாமல், நமது வாழ்வின் வழியாகவும் வெளிப்படவேண்டும்.

இணைந்து செல்லும் இப்பயணம் எப்போதும் எளிதாகவும், தெளிவாகவும் அமைவதில்லை. இருப்பினும் நாம் இப்பயணத்தை மேற்கொள்ள இறைவன் தூண்டுகிறார். நாம் மேற்கொள்ளும் இப்பயணத்தில், புனிதர்களும், மறைசாட்சிகளும் நம்முடன் துணை வருகின்றனர்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ், மற்றும், கத்தோலிக்க சமுதாயங்களை சேர்ந்த நாம் அனைவரும், ஒரு பொதுவான மொழியைப் பேசுவதில், எளிதாக இணையமுடியும். அதுதான் பிறரன்பு என்ற மொழி. நாம் மேற்கொள்ளும் பிறரன்புப் பணிகளில் இருவரும் இணைந்து  பணியாற்றுவது, நமது நம்பிக்கையைப் பறைசாற்றும்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தையாகிய நீங்கள், காப்டிக் கத்தோலிக்கத் திருஅவை மீது காட்டிவரும் அக்கறைக்கு நன்றி. கத்தோலிக்கத் திருஅவைக்கும், கீழை வழிபாட்டு முறை ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே சென்ற ஆண்டு நிகழ்ந்த கூட்டத்திற்கு தாங்கள் ஏற்பாடு செய்ததற்கும் நன்றி.

நம் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி, இரத்தத்தின் ஒன்றிப்பாகவும் மாறியுள்ளதை, விவரிக்க இயலாத இறைவனின் திட்டம் என்று கருதுகிறோம். முதல் நூற்றாண்டு துவங்கி, கிறிஸ்தவத்தின் சாட்சிகளாக வாழ்ந்தவர்கள் இந்நாட்டில் உள்ளனர். அன்று முதல், இன்று வரை, மாசற்றவர்களின் இரத்தம் சிந்தப்பட்டு வருகின்றது.

மறைசாட்சியரின் இரத்தத்தைத் தாங்கிய இம்மண்ணில், அதைத் தொடர்ந்து, பாலை நிலத்தில், துறவற வாழ்வின் சாட்சியங்கள் தோன்றின. மனிதர்களை சந்திக்க இறைவன் இறங்கிவந்த சீனாய் மலையைக் கொண்டுள்ள இந்த பூமிக்கு (காண்க. வி.ப. 24:16), புலம்பெயர்ந்த குழந்தையாய் இறைவனின் திருமகன் தங்கவந்த இந்த பூமிக்கு (காண்க. மத். 2:14), நான் ஒரு திருப்பயணியாக வந்துள்ளேன்.

திருத்தந்தையே, என் அன்பு சகோதரரே, நாம் தொடர்ந்து, அமைதியின் தூதர்களாக, உடன் பயணிகளாக, இவ்வுலகில் வாழ்வதற்கு, இறைவன் அருள் தருவாராக. அன்னை மரியா, நம்மை எப்போதும், தன் திருமகனிடம் அழைத்துச் செல்வாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.