2017-04-29 17:25:00

கெய்ரோ திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


ஏப்.29,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, As-salamu alaykum! சமாதானம் உங்களோடு இருப்பதாக!

உயிர்ப்புக் காலம் 3ம் ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, இரு சீடர்கள் எம்மாவு சென்ற பயணத்தைக் பற்றி பேசுகிறது. இந்த நிகழ்வை, மரணம், உயிர்ப்பு, வாழ்வு என்ற மூன்று வார்த்தைகளில் சுருக்கிக் கூற முடியும்.

மரணம். இவ்விரு சீடர்களும் ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் திரும்பிக்கொண்டிருந்தனர். இயேசுவின் சிலுவை மரணத்தால் வந்த வேதனை தந்த ஏமாற்றம் அது. அவரை நம்பி அவர்கள் வளர்த்துக்கொண்ட நம்பிக்கை அனைத்தும் இப்போது புதைக்கப்பட்டுவிட்டன. இறந்தோரை உயிர்ப்பித்த, நோயுற்றோரைக் குணமாக்கிய தங்கள் தலைவன், சிலுவையில் அவமானப்பட்டு இறந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அனைத்தும் வல்ல இறைவன் அவரை ஏன் காப்பாற்றவில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிறிஸ்துவின் சிலுவை, கடவுளை பற்றி அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தின் சிலுவை; கிறிஸ்துவின் மரணம், கடவுளைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த எண்ணங்களின் மரணம். அவர்களது குறுகிய எண்ணங்கள், அவர்களைக் கொன்று புதைத்துவிட்டன.

நாம் எத்தனை முறை இவ்வாறு சிந்தித்து, நம்மையே செயலற்று போகச் செய்துள்ளோம்! கடவுளின் சர்வ வல்லமை, சக்தியும், அதிகாரமும் கொண்டதல்ல, மாறாக, அன்பு, மன்னிப்பு, வாழ்வு இவற்றின் வழியே வெளிப்படுவதே அவரது வல்லமை என்பதை நம்ப மறுத்து, எத்தனை முறை நாம் விரக்தி அடைந்துள்ளோம்!

'அப்பத்தை உடைக்கும்போது' அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டனர். நமது உள்ளங்களை நிறைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களை, நமது கடின உள்ளங்களை உடைக்காவிடில், கடவுளின் முகத்தை நம்மால் கண்டுகொள்ள முடியாது.

உயிர்ப்பு. அவ்விரு சீடர்களும் இருளில் மூழ்கியிருந்தபோது, இயேசு அவர்களை அணுகி, அவர்களுடன் நடந்தார். தானே 'வழியும், உண்மையும், வாழ்வும்' (யோவான் 14:6) என்பதை அவர்கள் உணரச் செய்தார். மனித நம்பிக்கை மறையும்போது, அங்கு இறை நம்பிக்கை ஒளிர்வதுபோல், சீடர்களின் விரக்தியை, வாழ்வாக மாற்றுகிறார், இயேசு. தோல்வியடைந்து, நம்பிக்கையிழந்து, மிகக் கீழான நிலையை நாம் அடையும்போது, நாமே இவ்வுலகின் மையம், நமக்கு நாம் மட்டுமே போதும் என்ற மாயையை நாம் களையும்போது, இறைவன் நம் மரணத்தை உயிர்ப்பாக மாற்றுகிறார். திருநூல், சட்டம், இறைவாக்கினர் அனைவரும் கூறியவை நிறைவேறின என்பதை அவ்விரு சீடர்களுக்கும் இயேசு புரியவைத்தார். நம்பிக்கையின்மை என்ற கல்லறையிலிருந்து அவர்களை இயேசு உயிர்ப்பித்து, மீண்டும் எருசலேமுக்கு அனுப்பி வைத்தார்.

வாழ்வு. உயிர்த்த இயேசுவைச் சந்தித்த சீடர்களின் வாழ்வு முற்றிலும் மாறியது. அவ்வாறே நம் வாழ்வும், பலன் தரும் வகையில் மாறும். தன்னை அடையாளம் காட்டியதும், இயேசு அவர்களிடமிருந்து மறைந்தார். வரலாற்றில் உயிர்பெற்று, உடலுடன் தோன்றிய இயேசுவை, நாம் பற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதைச் சொல்லித்தர இயேசு அங்கிருந்து மறைந்தார். அந்த அனுபவத்திற்குப் பின், அவர்களின் உள்ளம், இறைவனால் நிறைந்தது.

நம் உள்ளங்கள் இறைவனால் நிறையாதபோது, நம் வழிபாட்டுத் தலங்களை நிரப்புவது பயனற்றது என்பதை, எம்மாவு சென்ற சீடர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர். நம் மத உணர்வுகள், நம்பிக்கையாலும், பிறரன்பாலும் நிறையவில்லை எனில், அவை பயனற்றவை.

நம் நம்பிக்கை, பிறரன்பிலும், இரக்கத்திலும் நம்மை  வளர்க்கவேண்டும். அயலவரை மன்னிப்பதற்கும், தேவையில் இருப்போருக்கு உதவிகள் செய்வதற்கும் நம் நம்பிக்கை நம்மை உந்தித்தள்ளவேண்டும் (காண்க. மத். 25). நம் உரிமைகளைக் காப்பதற்கு நாம் காட்டும் அதே ஆர்வத்துடன் அடுத்தவர் உரிமைகளைக் காப்பதற்கு நம் நம்பிக்கை நம்மை அழைக்கிறது.

அன்பு சகோதர, சகோதரிகளே, நம் வாழ்வின் வழியே பறைசாற்றப்படும் நம்பிக்கையே, இறைவனை மகிழ்விக்கும். நம்மிடம் வெளிப்படும் தீவிரப் பற்று, பிறரன்பில் நாம் காட்டும் தீவிரப் பற்றாக இருக்கவேண்டும். வேறுவகை தீவிரப் பற்றுகள் இறைவனிடமிருந்து வருவன அல்ல.

மகிழ்வாலும், நம்பிக்கையாலும் நிறைந்த எம்மாவு சீடர்கள், எருசலேமுக்குத் திரும்பியதைப் போல, நீங்களும், உங்கள் குடும்பங்கள், பணி இடங்கள், உங்கள் அன்பு நாடு ஆகியவை அடங்கிய உங்கள் தினசரி வாழ்வுக்குத் திரும்பிச் செல்லுங்கள். உயிர்த்த இறைவனை, உங்கள் அன்பின் வழியே அயலவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் வாழ்வை மாற்றுங்கள்.

அன்னை மரியாவும், இந்த பூமியில் சில காலம் வாழ்ந்த திருக்குடும்பமும் உங்கள் உள்ளங்களுக்கு அறிவொளி தந்து, உங்களை ஆசீர்வதிக்கட்டும்! புனித மாற்கு வழியே, கிறிஸ்துவுக்கு அறிமுகமான இந்நாட்டை, இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!

கிறிஸ்து உயிர்த்துவிட்டார்! உண்மையில் உயிர்த்துவிட்டார்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.