2017-04-29 16:59:00

காப்டிக் ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க இணை அறிக்கை


ஏப்.29,2017. முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்கள் இணைந்து பொதுவான அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். இப்பொது அறிக்கை 12 பிரிவுகளைக் கொண்டிருந்த்து. கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இரண்டும், ஒன்று மற்றதன் திருமுழுக்கை ஏற்றுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய அங்கீகரிப்பு, முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையினர் கத்தோலிக்கத்தில் சேர்ந்தாலோ, கத்தோலிக்கர், அச்சபையில் சேர்ந்தாலோ, மீண்டும் திருமுழுக்குப் பெற வேண்டிய அவசியமில்லை. எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு சபைகளுக்கும் இடையே இடம்பெறும் உரையாடலில், தொடர்ந்து காணப்பட்டு வந்த இப்பிரச்சனைக்கு இதன் வழியாக தீர்வு காணப்பட்டுள்ளது. காப்டிக் சபையின் முன்னாள் திருத்தந்தை 3ம் ஷெனூதா (Shenouda III), கத்தோலிக்கத் திருத்தந்தை ஆறாம் பவுல் ஆகிய இருவரும், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1973ம் ஆண்டு மே மாதம், முதல் முறையாக சந்தித்ததன் விளைவாக, இவ்விரு சபைகளின் உறவுகளில் மைல்கல் நாட்டப்பட்டது. அறநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பிரிவினைகளுக்குப் பின், இச்சந்திப்பின் பயனாக, அனைத்து கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளோடு, கத்தோலிக்க திருஅவை இறையியல் குழு ஒன்றை உருவாக்கியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களும் இணைந்து இவ்வெள்ளி மாலையில் வெளியிட்ட பொது அறிக்கையில், இச்சபைகளுக்கு இடையேயான உறவுகளிலும், இந்த இறையியல் குழுவின் உரையாடலிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நினைவுகூரப்பட்டு, பொதுவான செபத்தின் வழியாக, விசுவாசத்தில், பகிர்ந்துகொள்ளப்படும் தங்களின் மூலங்களில் மேலும் ஆழப்படுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நம் ஆண்டவரின் வானகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பொதுவான மொழி பெயர்ப்புக்கும், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை பொதுவான தேதியில் கொண்டாடுவதற்கும் இதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வு, திருமணம் மற்றும் குடும்ப வாழ்வின் புனிதம், படைப்பை மதித்தல் ஆகிய விழுமியங்களில் கத்தோலிக்கரும், காப்டிக் சபையினரும் ஒன்றிணைந்து சான்று பகரவும், தங்களின் விசுவாசத்திற்காக, குறிப்பாக, எகிப்திலும், மத்திய கிழக்கிலும், நசுக்கப்பட்டு கொல்லப்படும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்காக, இவ்விரு சபையினரும் உருக்கமாகச் செபிக்கவும், இவ்வறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. 

முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களைச் சந்தித்த பின்னர், அச்சபையின் தூய பேதுரு ஆலயத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு செபமும் நடைபெற்றது. இச்செபத்தின் இறுதியில், கடந்த டிசம்பரிலும், மூன்று வாரங்களுக்கு முன்னும், தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்காக, இவ்விரு கிறிஸ்தவத் தலைவர்களும் செபித்தனர். எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்களின் துன்பங்கள், எங்கள் துன்பங்களாகவும் உள்ளன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்கள், காப்டிக் கிறிஸ்தவ சபையின் 118வது திருத்தந்தை. ஏறக்குறைய கி.பி. 42ம் ஆண்டில், நற்செய்தியாளர் புனித மாற்கு அவர்களால் இச்சபை உருவாக்கப்பட்டது. 451ம் ஆண்டில் இடம்பெற்ற கால்சிதோன் பொதுச்சங்கத்தில், கிறிஸ்து இயல் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இச்சபை பிரிந்தது. 

இச்சந்திப்பை முடித்து, அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு இரவு உணவு அருந்திய பின்னர், அவ்விடத்திற்கு முன்பாகக் கூடியிருந்த ஏறக்குறைய முன்னூறு இளையோரை வாழ்த்தினார் திருத்தந்தை. இவர்கள், எகிப்தின் வடக்கு மற்றும், தென் பகுதிகளிலிருந்து திருப்பயணிகளாக வந்திருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.