2017-04-29 16:17:00

எகிப்து அரசுத் தலைவர், அதிகாரிகளைச் சந்தித்த திருத்தந்தை


ஏப்.29,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 28, இவ்வெள்ளிக்கிழமை,  உரோம் நேரம் காலை 10.45 மணிக்கு, எகிப்து நாட்டிற்கு, திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். அன்று மாலை நான்கு மணியளவில் எகிப்து தலைநகர் கெய்ரோவைச் சென்றடைந்த திருத்தந்தை அமோக வரவேற்பைப் பெற்றார். அன்றைய நாள், நான்கு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. எகிப்து அரசுத்தலைவர் Abdel Fattah el-Sisi சந்திப்பு, பல்சமய உரையாடலை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், முஸ்லிம் உலகில், சுன்னி இஸ்லாம் பிரிவின் புகழ்பெற்ற, அல்-அசார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை ஆற்றிய உரை, எகிப்தின் உயர்மட்ட அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு திருத்தந்தை ஆற்றிய உரை, எகிப்தின் காப்டிக் திருத்தந்தை, முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களைச் சந்தித்து, கையெழுத்திட்ட பொதுவான அறிக்கை, இறுதியாக, உலகில், சமய வன்முறைக்குப் பலியான அனைவரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள Al-Boutrossiya சிறிய ஆலயத்தில் மக்களைச் சந்தித்தது. 90 விழுக்காட்டு முஸ்லிம்களையும், பத்து விழுக்காட்டு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களையும் கொண்ட எகிப்தில், திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகள் பற்றி விவரித்த இணையதள மற்றும், ஏனைய ஊடகங்கள், வியந்து பாராட்டி எழுதியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 18வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகவும், அவர் தனது நான்காண்டுக்கு மேற்பட்ட தலைமைத்துவப் பணியில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் 27வது நாடாகவும் எகிப்து நாட்டுக்கான இப்பயணம் அமைந்துள்ளது. ‘அமைதியின் எகிப்தில், அமைதியின் திருத்தந்தை’என்ற விருது வாக்குடன் நடைபெற்ற

இப்பயணத்தில், இவ்வெள்ளி உள்ளூர் நேரம், 4.40 மணிக்கு, கெய்ரோ நகரிலுள்ள, Al-Masah பயணியர் விடுதியில், எகிப்து அரசுத்தலைவர், தூதரக அதிகாரிகள், எகிப்தின் பொது மக்கள் பிரதிநிதிகள் என, ஏறக்குறைய 800 பேரை திருத்தந்தை சந்தித்தார்.

இச்சந்திப்பில், எகிப்து அரசுத்தலைவர் Abdel Fattah el-Sisi அவர்கள், முதலில், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். மதத்தின் பெயரால், பயங்கரவாதச் செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள இஸ்லாம் போராளிகள், தங்களை, முஸ்லிம்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. உண்மையான இஸ்லாம், அப்பாவிகளைக் கொலைசெய்யத் தூண்டாது. சீனாய் தீபகற்பத்தின் வடபகுதியில் மையம் கொண்டுள்ள இஸ்லாம் போராளிகளின் கிளர்ச்சிக்கு எதிராக, எகிப்து நாடு, பல ஆண்டுகளாகப் போரிட்டு வருகின்றது என்றார், எகிப்து அரசுத்தலைவர் Fattah el-Sisi. இதைத் தொடர்ந்து திருத்தந்தை அங்கு உரையாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.