2017-04-29 16:40:00

எகிப்து அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


ஏப்.29,2017. அரசுத் தலைவரே, அல்-அசாரின் பெரும் ஆசானே, அரசு அதிகாரிகளே, பன்னாட்டு தூதர்களே, பெண்மணிகளே, பெரியோரே, As-salamu alaykum! சமாதானம் உங்களோடு இருப்பதாக!

பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள எகிப்து நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. மனித வரலாற்றிற்கும், கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கும் இந்த நாடு பெரும் பங்காற்றியுள்ளது. பார்வோன்கள், காப்தியர்கள், இஸ்லாமியர் ஆகியோருடன், கிறிஸ்தவ முதுபெரும் தந்தையரும் இந்நாட்டில் வாழ்ந்துள்ளனர் அல்லது, இந்நாட்டின் வழியே சென்றுள்ளனர்.

சீனாய் மலையில் இறைவன் தன்னையே மோசேக்கு அறிமுகம் செய்து, அவர் வழியே மக்களுக்கு பத்துக் கட்டளைகளை வழங்கினார். திருக்குடும்பம் இந்நாட்டில் வரவேற்பும், தஞ்சமும் பெற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், திருக்குடும்பத்திற்கு எகிப்து தந்த வரவேற்பு எங்கள் உள்ளங்களில் அழியாமல் நிலைத்து நிற்கிறது. இன்றும் இந்நாடு, சூடான், எரித்திரியா, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பளிப்பது போற்றுதற்குரியது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும் தீர்வு காண்பதில் எகிப்து முக்கிய பங்கு வகிக்கிறது. தன் சொந்த நாட்டுக்குள் மதியற்ற வன்முறைகளை சந்தித்தாலும், மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதியைக் கொணர, எகிப்து நாடு பங்காற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மதியற்ற வன்முறைகளால் கிறிஸ்தவர்கள், அதிலும் குறிப்பாக, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர், மற்றும் இவ்வாண்டு ஏப்ரல் மாதங்களில் வன்முறைகளுக்குப் பலியான கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களுக்கு இறைவன் விரைவில் நலம் அருள வேண்டுகிறேன்.

அரசுத் தலைவரே, மதிப்பிற்குரிய பெண்மணிகளே, பெரியோரே, அமைதியை வளர்க்கவும், முன்னேற்றத்தை உறுதி செய்யவும், இந்நாட்டில் மேற்கொள்ளபப்டும் முயற்சிகளை நான் ஊக்குவிக்கிறேன். முழு மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி, நாட்டின் முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாட்டின் பெருமை, அந்நாட்டின் மிக வலுவற்ற அங்கத்தினர்களான - பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் - ஆகியோர் மீது காட்டப்படும் அக்கறையைக் கொண்டு அளவிடப்படும்.

கடவுளை மனிதர்கள் காக்கவேண்டிய அவசியம் இல்லை, மாறாக, கடவுள் மனிதர்களைக் காக்கிறார் என்பதை அடுத்தத் தலைமுறையினருக்குச் சொல்லித் தருவது நமது கடமை. எந்த ஒரு கடவுளும், மனிதர்கள் அழிவதை விரும்புவதில்லை. உண்மையான கடவுள், நிபந்தனையற்ற அன்பு கொண்டவர். அவர், அனைத்து உயிர்களையும் காப்பவர்.

நீதியைக் குறித்து போதனைகள் செய்துவிட்டு, அதை நடைமுறையில் பின்பற்றாதவரை வரலாறு மன்னிப்பதில்லை என்பதை பறைசாற்றுவது நம் கடமை. இவ்வுலகில் வெறுப்பை விதைத்து, மறு உலகில் நன்மை கிடைக்கும் என்ற மாயக்கனவை வியாபாரம் செய்வோரின் முகமூடியைக் களைவது நம் கடமை. அமைதிக்காக உழைக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரையும், வரலாறு மேன்மைப்படுத்துகிறது. "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடடுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத். 5:9)

முதுபெரும் தந்தையான யோசேப்பு வாழ்ந்த காலத்தில், மக்களை பஞ்சத்திலிருந்து காத்த எகிப்து, (தொ.நூல் 41:57), தற்போது, அன்பு, உடன்பிறந்த உணர்வு இவற்றில் ஏற்பட்டுள்ள பஞ்சத்திலிருந்து இப்பகுதியைக் காப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது.

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மூன்று பெரும் மதங்களின் தொட்டிலாக விளங்கும் மத்தியக்கிழக்குப் பகுதியில், நீதி, உடன்பிறந்த உணர்வு என்ற அடித்தளங்களின் மேல் உறுதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப, எகிப்து முக்கிய பங்காற்றவேண்டும்.

திருப்பீடத்திற்கும், எகிப்து அரேபிய குடியரசுக்கும் இடையே உருவான நல்லுறவின் 70ம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு சிறப்பிக்கிறோம். இந்த உறவு மென்மேலும் வளர்வதற்கு இந்தப் பயணம் உதவும் என்பது என் நம்பிக்கை.

பல்வேறு மத நம்பிக்கை கொண்டோர், மதிப்போடும், நீதியோடும் இணைந்து வாழமுடியும் என்பதை எகிப்து நாத்தில் வாழும் நீங்கள் ஒவ்வொருவரும் உலகிற்கு அறிவித்து வருகிறீர்கள்.

நீங்கள் அளித்துள்ள வரவேற்பிற்கு மிக்க நன்றி. அனைத்தும் வல்ல இறைவன் எகிப்து மக்களை தன் ஆசீரால் நிறைப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.