2017-04-28 17:02:00

அல்-அசார் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தையின் உரை


ஏப்.28,2017. As-salamu alaykum! சமாதானம் உங்களோடு இருப்பதாக!

நைல் நதிக்கரையோரம் வளர்ந்து வந்த எகிப்து நாட்டு கலாச்சாரம், தொன்றுதொட்டு, கலாச்சாரத்தின் இலக்கணமாக விளங்கியது. கணிதம், வான்வெளியின் கண்டுபிடிப்புக்கள், கட்டடக்கலை என்று பல துறைகளில், எகிப்து நாடு அறிவொளியை ஏற்றி வைத்துள்ளது. அறிவு சார்ந்த தேடல், கல்வி இவற்றிற்கு இந்நாட்டு முன்னோர் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதற்கு முடிவெடுத்தனர். இன்றையச் சூழலில், நம் எதிர்காலத்தைக்  காப்பதற்கு இத்தகைய முடிவுகள் மீண்டும் எடுக்கப்படவேண்டும். தகுந்த கல்வி இல்லையெனில், அடுத்த தலைமுறையினர் அமைதியை உணர முடியாது.

வாழ்வின் ஞானத்தை உணர கல்வி மிகவும் அவசியம். கல்வியே தனி மனிதர்களிடமிருந்து உன்னதமானவற்றை வெளிக்கொணர்கிறது. அயலவரை புறந்தள்ளிவிட்டு, ஒருவர், தன்னிலேயே போலியான அடையாளத்தைக் காணும் போக்கிலிருந்து உயர்ந்து செல்வதற்கு, உண்மை ஞானம் உதவுகிறது. அயலவரைச் சந்திப்பதற்கு உள்ள அனைத்து வாய்ப்புக்களையும் ஞானம் தேடிச் செல்கிறது. பொய்மையையும், சக்தியை தவறாகப் பயன்படுத்தும் போக்கையும் நிராகரித்து, மனித மாண்பில் மையம் கொண்டிருப்பது உண்மை ஞானம். ஒவ்வொருவரும் இறைவனின் பார்வையில் விலைமதிப்பு மிக்கவர் என்பதால், அடுத்தவரைக் கண்டு அஞ்சாமல், நெருங்கிச் செல்வதற்கு ஞானம் உதவுகிறது.

பல்சமய உரையாடல் வழியே, நாம் ஒருவரை ஒருவர் சந்தித்து, உடன் நடக்க இயலும். இந்த சந்திப்பின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையில், நம் எதிர்காலம் அடங்கியுள்ளது. அல்-அசார் கழகமும், பலசமய உரையாடல் திருப்பீட அவையும் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள், இத்தகைய உரையாடல் முயற்சிகளுக்கு தெளிவான எடுத்துக்காட்டுகள். 8 நூற்றாண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டுக்கு வருகை தந்து, சுல்தான் Malik al Kamil அவர்களை சந்தித்த, அசிசி நகர் புனித பிரான்சிஸ் நமக்காகப் பரிந்துபேசுவாராக!

எகிப்து, ஞானத்தின் உதயத்தை மட்டும் கொண்ட நாடல்ல, மாறாக, பல்வேறு மதங்களின் ஒளியிலும் மிளிர்ந்த நாடு. இங்கு அமைந்துள்ள சீனாய் மலை, இறைவன் மக்களோடு மேற்கொண்ட உடன்படிக்கையின் மலை. எனவே, நாம் மேற்கொள்ளும் அமைதி முயற்சிகளில் இறைவனை ஒதுக்கிவிட்டு நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.

நாம் வாழும் காலத்தில், ஒன்று, மதம் ஓரமாக ஒதுக்கி வைக்கப்படுகிறது. அல்லது, மதத்தை வைத்து, பல்வேறு குழப்பங்களும் நிகழ்கின்றன. மதத்தை ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல், ஒரு தீர்வாக காணவேண்டியது நம் கடமை.

சீனாய் மலை என்ற உருவகத்திற்குத் திரும்புவோம். அங்கு இறைவன் கொடுத்த பத்து கட்டளைகளில், 'கொலை செய்யாதே' (வி.பயணம் 20:13) என்பது, அனைத்து காலங்களுக்கும்,அனைத்து மனிதர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கட்டளை. கடவுள் எப்போதும் வாழ்வின் மீது அன்பு கொண்டவர் என்பதால், நாமும் அந்த நிலைக்கு அழைக்கப்பட்டுள்ளோம். வன்முறை என்பது வாழ்வை நிராகரிக்கும் ஒரு நிலை.

புனிதத்தின் போர்வையில் வெளிப்படும் வன்முறையின் முகமூடியைக் களைவது, மதத் தலைவர்கள் என்ற முறையில், நம் கடமை. அமைதி ஒன்றே இறைவனின் பெயர், அது ஒன்றே இறைவனின் இயல்பு. எனவே, கடவுளின் பெயரால் வன்முறைகளை மேற்கொள்வது, அந்தக் கடவுளின் பெயரை களங்கப்படுத்துவதாகும்.

மக்களை சந்திக்க கடவுள் இறங்கிவந்த இந்த நாட்டில், விண்ணும் மண்ணும் சந்திக்கும் இந்த பூமியில், நாம் அனைவரும் இணைந்து ஒரே குரலில், வன்முறை வேண்டாம் என்று குரல் கொடுப்போம்.

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வுலகில் நிலவும் வறுமையை, சுரண்டலை ஒழிப்பதும் முக்கியம். சிறப்பாக, ஆயுதங்களின் வளர்ச்சியை நிறுத்துவது, நமது மிக முக்கிய கடமை.

கலாச்சாரம், மற்றும் உடன்படிக்கையின் நாடாக இருக்க அழைக்கப்பட்டுள்ள எகிப்து, இந்த உன்னத அழைப்பை நிறைவேற்றும் என்பது, என் நம்பிக்கை. மக்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அமைதி, இந்நாட்டிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் வளர்வதற்கு, எகிப்து, தன் பங்கை ஆற்றுவதாக!

As-salamu alaykum! சமாதானம் உங்களோடு இருப்பதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.