2017-04-27 16:06:00

கிறிஸ்தவர்களே மிக அதிக அளவில் வன்முறைகளைச் சந்திக்கின்றனர்


ஏப்.27,2017. மத அடிப்படையில் எழும் வன்முறைகள் என்ற கேள்வி எழும்போது, உலகெங்கும் கிறிஸ்தவர்களே மிக அதிக அளவில் வன்முறைகளை சந்திக்கின்றனர் என்று, அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுவதாக, UCAN நிறுவனம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

"Under Caesar's Sword", அதாவது, 'சீசரின் வாளுக்குக் கீழ்' என்ற தலைப்பில், அமெரிக்க ஐக்கிய நாட்டின், Notre Dame பல்கலைக் கழகமும், Georgetown பல்கலைக் கழகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வன்முறைகளுக்கு அதிக அளவில் இலக்காவது கிறிஸ்தவ சமுதாயமே என்று கூறப்பட்டுள்ளது.

வன்முறைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவ சமுதாயம், தொடர்ந்து துன்பங்களைத் தாங்கி வாழ்தல், அடுத்த சமுதாய உதவிகளை நாடுதல் என்ற இரு முறைகளை பின்பற்றுகின்றனர் என்றும், வெகு சிலரே, பதிலுக்குத் தாக்குதல் என்ற வழியைப் பின்பற்றுகின்றனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள், தொடர்ந்து துன்பங்களைத் தாங்கி வாழ்பவர்கள் என்றும், எகிப்து நாட்டில் காப்டிக் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவருக்கொருவர் உதவியாக உள்ளனர் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளி உலகிலிருந்து தனிப்படுத்தப்பட்டுள்ள நாடுகளான வட கொரியா, எரித்திரியா, சொமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் மிக அதிக அளவில் வன்முறைகளை சந்தித்து வருகின்றனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.