ஏப்.26,2017. “அக்காலத்தில், பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள
ஒரு மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து
அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக்
கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை
எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்(மத்.28:16,18-20)”. மத்தேயு நற்செய்தியில், நிறைவுப்
பிரிவிலுள்ள இத்திருச்சொற்கள், இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்,
பொது மறைக்கல்வியுரையில் பல மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டன. வத்திக்கான் தூய பேதுரு
வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு முதலில் காலை வணக்கம்
சொல்லி, தனது மறைக்கல்வியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புச் சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கை என்பது பற்றிய நம் மறைக்கல்வித் தொடரில்,
இந்த உயிர்ப்புக் காலத்தில், இயேசுவின் உயிர்ப்புப் பற்றி இன்று நாம் சிந்திப்போம். இயேசுவின்
உயிர்ப்பே, கடவுளின் நிரந்தரமான பாதுகாப்பிலும் அன்பிலும் நாம் உறுதியான நம்பிக்கை வைப்பதற்கு
அடித்தளமாக அமைந்துள்ளது. இயேசுவை இம்மானுவேலராய், அதாவது, ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’என்று
சொல்லி, புனித மத்தேயு தனது நற்செய்தியை, இயேசுவின் பிறப்போடு ஆரம்பிக்கிறார். உலக முடிவுவரை
எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என, உயிர்த்த ஆண்டவர் அளித்த வாக்குறுதியுடன்,
மத்தேயு தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார். நம் வாழ்வுப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும்,
கடவுள் நம் பக்கம் இருக்கின்றார். பழைய முதுபெரும் தந்தையருக்கு அவர் ஆற்றியது போன்று,
நாமும் நம் இவ்வுலகப் பயணத்தின் இலக்கை அடைவதற்கு, அவர் நம்மை இட்டுச் செல்கிறார். கடவுளின்
பராமரிப்பு, நமக்கு உலக முடிவுவரை இருக்கின்றது. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும், ஆனால்,
அவர் தம் அன்புப் பராமரிப்பில் என்றும் நம்மைத் தொடர்ந்து காத்து வருவார். கிறிஸ்தவ நம்பிக்கை,
தொன்மை காலத்திலிருந்தே நங்கூரத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவின் வாழ்வு,
மரணம் மற்றும், உயிர்ப்பில் நிறைவுற்ற கடவுளின் வாக்குறுதிகளில் உறுதியான அடிப்படையைக்
கொண்டிருப்பதன் அடையாளமாக நங்கூரம் உள்ளது. நம் நம்பிக்கை, நம்மீதோ அல்லது இந்த உலகின்
மீதோ இல்லாமல், கடவுளின் மீது இருப்பதால், தம்மைப் பின்பற்ற விடுக்கும் இயேசுவின் அழைப்பை
ஏற்பதற்கு, நாம் தயாராக உள்ளோம். அதோடு, வாழ்வின் இன்னல்கள், ஏமாற்றங்கள் மற்றும், தோல்விகளில்
நாம் மனம் தளராமல் உள்ளோம். உயிர்த்த கிறிஸ்துவின் வெற்றியில், நாம் வைக்கும் நம்பிக்கை,
நித்திய வாழ்வின் நிறைவை நோக்கிய நமது பயணத்தின் ஒவ்வொரு படியையும் நம்மில் உறுதி செய்வதாக!
“உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் (மத்.28,20)” என்ற உயிர்த்த
இயேசுவின் வாக்குறுதியில் நம்பிக்கை வைக்க நம்மை அழைத்து, இப்புதன் மறைக்கல்வி உரையை
நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இப்பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட,
திருமண வாழ்வில் பொன் விழாவைச் சிறப்பித்த தம்பதியரிடம், இவ்வாழ்வின் அழகையும், மகிழ்வையும்,
இளையோருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்றார் திருத்தந்தை. பின்னர், அனைத்துப் பயணிகள்
மற்றும், அவர்களின் குடும்பங்களின் மீது, நம் தந்தையாம் இறைவனின் அன்பிரக்கம் பொழியப்பட
செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |