2017-04-26 16:52:00

பாகிஸ்தான் பள்ளிகள், சிறைகளைப் போல் தோற்றமளிக்கின்றன


ஏப்.26,2017. பாகிஸ்தானில் உள்ள பல பள்ளிகள், அண்மையக் காலங்களில், சிறைகளைப் போல் தோற்றமளிக்கின்றன என்று இலாகூர் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தொடர்ந்துவரும் வன்முறைகளுக்குப் பதிலளிக்கும் வண்ணம், பள்ளிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற புதிய விதி முறைகளுக்கு ஏற்ப, பள்ளிகளின் சுற்றுச் சுவர்களை இன்னும் உயரமாக்குதல், கண்காணிப்பு காமராக்கள், காவல் ஏற்பாடுகள் என்று, பள்ளியின் நிர்வாகிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்று பேராயர் ஷா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பள்ளிக்குள் நுழையும் மாணவ, மாணவியர், பல அடுக்கு பாதுகாவல் ஏற்பாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் ஒரு சிறைக்குள் செல்லும் அனுபவத்தைப் பெறுகின்றனர் என்று, பேராயர் ஷா அவர்கள் கவலை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலாகூர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து, இவ்வாண்டு, புனித வாரம் முழுவதும், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி, காவல் துறையும், அந்தந்த ஆலய நிர்வாகிகளும் பல அடுக்கு பாதுகாவல் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று, பேராயர் ஷா அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.