2017-04-26 16:34:00

திருத்தந்தையின் பயணம், ஒன்றிப்பு முயற்சிகளுக்கு ஒரு மகுடம்


ஏப்.26,2017. எகிப்து நாட்டில், இஸ்லாமிய உடன்பிறப்புக்களோடு மேற்கொள்ளப்பட்டுவரும் உரையாடலுக்கும், இந்நாட்டில் வளர்ந்துவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கும் ஒரு மகுடம் வைப்பதுபோல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எகிப்து திருத்தூதுப் பயணம் அமையும் என்று, அந்நாட்டின் காப்டிக், கத்தோலிக்க முதுபெரும் தந்தை கூறியுள்ளார்.

ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தையொட்டி, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், அலெக்ஸ்சாந்திரியா காப்டிக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை, Anba Ibrahim Isaac Sidrak அவர்கள் இவ்வாறு கூறினார்.

நாட்டில் நிலவும் வன்முறைகள் குறித்து இப்பேட்டியில் கேள்வி எழுந்தபோது, தனி மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் உருவானால் மட்டுமே, இத்தகைய அர்த்தமற்ற வன்முறைகளை தடுக்கமுடியும் என்று முதுபெரும் தந்தை Isaac Sidrak அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எகிப்து நாட்டின் இளையோரை உருவாக்குவதில் காப்டிக் கத்தோலிக்க திருஅவை இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதே தங்கள் குறிக்கோள் என்று முதுபெரும் தந்தை Isaac Sidrak அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.